Last Updated : 08 May, 2016 11:55 AM

 

Published : 08 May 2016 11:55 AM
Last Updated : 08 May 2016 11:55 AM

மோடியின் உரைகளை நூலாக வெளியிட திட்டம்

கடந்த மே 2014-ல் பிரதமராக மோடி பதவியேற்றார். அப்போது முதல் அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதாக புகார் எழுந்தாலும், அந்த அளவுக்கு வெளிநாடுகளில் அவர் ஆற்றிய உரைகளும் அதிகம். தீவிரவாதம் முதல் பருவ நிலை மாற்றம் வரை பல்வேறு தலைப்புகளில் அவர் உரையாற்றி யுள்ளார். இதை படித்து உலக நாடுகளும் மோடியின் சிந்தனை களை அறியும் வகையில் அவற்றை ஆங்கிலத்தில் நூலாக வெளியிட வெளியுறவு அமைச்சகம் திட்டமிட் டுள்ளது. இந்த மொழிபெயர்ப்பு உலகத் தரத்தில் இருக்க வேண்டும் என்பதால் திறமை வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்களை தேடி வருகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “சீன அதிபர் வெளிநாடுகளில் சீன மொழியில் ஆற்றிய உரைகள் கடந்த 2014-ல் ‘கவர்னன்ஸ் ஆப் சீனா’ என்ற ஆங்கில நூலாக வெளி வந்தது. இதேபோன்று பிரதமர் மோடியின் உரைகளை வெளியிட யோசனை முன் வைக்கப் பட்டு, பிரதமரால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இதுவரை தொகுக்கப் பட்ட பிரதமரின் உரைகள் 90 ஆயிரம் வார்த்தைகளை தாண்டுகிறது. இவ்வளவையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது எளிதல்ல. இதற்காக திறமையான மொழிபெயர்ப்பாளர்களை தேடி வருகிறோம்.” என்று தெரிவித்தனர்.

வெளிநாட்டு அதிபர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இந்தியை விட ஆங்கிலத்தில் பேசவே மோடி அதிகம் விரும்பு கிறார். இது அவரது முன்னோடி யான வாஜ்பாய் பாணியாக கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் பேசும் வெளிநாட்டு அதிபர்களிடம் வாஜ்பாய் ஆங்கிலத்திலும், தங்கள் நாட்டு மொழியில் பேசுவோருடன் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் இந்தியிலும் பேசி வந்தார். இதே பாணியை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பின்பற்றி வருகிறார். இதில் மோடியை விட சுஷ்மா தெளிவான ஆங்கிலம் பேசுவதாகக் கூறப்படுகிறது. எனினும் இவர்கள் உரையை மொழி பெயர்க்க வேண்டி வெளியுறவுத் துறை அதிகாரிகள் உடன் இருப்பதுண்டு. இந்த அதிகாரிகளில் பெரும்பாலானோர் சீனா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மன் என ஏதேனும் ஒரு நாட்டின் மொழியை அறிந்திருப்பார்கள்.

பாகிஸ்தான் அதிபர் நவாஷ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் ஆகியோரிடம் மோடி பேசும்போது அவருக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுவதில்லை. ஏனெனில் இவர்கள் பேசும் உருது மொழியை புரிந்து கொள்வதில் மோடிக்கு சிக்கல் இருப்பதில்லை. இதேபோல் மோடியின் இந்தியை யும் இவ்விருவரும் எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள். இவர் களில் கர்சாய் இந்தியாவில் கல்வி பயின்றவர்.

மோடியின் உரைகள் நூலாக தொகுக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது ஆற்றிய உரைகள் கடந்த 2007-ல் ‘கர்மா யோகா’ என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x