

முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு கோருவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடந்த பிரதமர் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்றதால், முதல்வர் ஜெயலலிதா அவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா ஜூன் 3-ம் தேதி டெல்லி சென்று பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அளிப்பார் என்று தமிழக அரசு அறிவித்தது.
பிரதமரை சந்திப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை காலை தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். மதியம் பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியைச் சந்தித்து முதலில் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். பின்னர், தமிழக அரசின் கோரிக்கைகள் கொண்ட பட்டியலை பிரதமரிடம் வழங்குவார்.
அப்போது, மத்திய அரசின் உதவிக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் தமிழகத்துக்குத் தேவையான முக்கியத் திட்டங்கள், தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய திட்டங்கள் ஆகியவற்றுக்கு விரைவில் அனுமதி வழங்குவதுடன் கூடுதல் நிதியும் ஒதுக்க வேண்டும் என்று பிரதமரிடம் ஜெயலலிதா கோருவார்.
அத்துடன் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது, முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்துவது, தமிழக மீனவர் பிரச்சினை, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்குவது தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பது குறித்தும் பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துவார்.
மேலும், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் ரயில்வே திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமரை முதல்வர் வலியுறுத்துவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்வதையொட்டி, தமிழகத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக எம்.பி.க்கள் 37 பேரும் விமானம் மூலம் திங்கள்கிழமை டெல்லி சென்றனர். மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.
பிரதமரைச் சந்தித்துவிட்டு செவ்வாய்க்கிழமை மாலையிலேயே முதல்வர் சென்னை திரும்பிவிடுவார் என்றும் அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பதவியேற்பதற்காக வரும் 5-ம் தேதி வரை டெல்லியில் தங்கியிருப்பார்கள் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.