Published : 20 May 2016 10:21 AM
Last Updated : 20 May 2016 10:21 AM

மேற்கு வங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பெற்று திரிணமூல் வெற்றி: மீண்டும் முதல்வராகிறார் மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களுடன் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி 2-வது முறையாக மீண்டும் முதல்வராகிறார்.

மேற்குவங்கத்தில் 294 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2011-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 184 தொகுதிகளைக் கைப்பற்றி முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்மூலம் 34 ஆண்டுகால இடதுசாரி கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 6 கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி, பாஜக என மும்முனைப் போட்டி நிலவியது.

ஆட்சி அமைக்க 148 உறுப்பினர் களின் ஆதரவு தேவை என்ற நிலையில் திரிணமூல் காங்கிரஸ் 211 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு இடங்களை திரிணமூல் கைப்பற்றியுள்ளது.

கடந்த 1972-ம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 216 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதன்பிறகு 200 தொகுதிகளை வென்ற கட்சி என்ற பெருமையை திரிணமூல் இப்போது பெற்றுள்ளது.

இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் 26, இந்திய கம்யூனிஸ்ட் 1, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி 3, பார்வர்டு பிளாக் 2, காங்கிரஸ் 44 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

பாஜக 3 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா 3 தொகுதிகளையும் பெற்றுள்ளது.

வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை திரிணமூல் காங்கிரஸுக்கு 44.9 சதவீதமும் இடதுசாரிகளுக்கு 25.6 சதவீதமும் காங்கிரஸுக்கு 12.3 சதவீதமும் பாஜகவுக்கு 10.2 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் மொத்தம் 65,520 வாக்குகளைப் பெற் றார். அவருக்கு அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் தீபா தாஸ் முன்ஷி 40,219 வாக்குகளையும் பாஜக வேட்பாளர் சந்திர குமார் போஸ் 26,299 வாக்கு களையும் பெற்றனர். இந்தத் தொகுதி யில் 25,301 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா வெற்றி பெற்றுள்ளார்.

திரிணமூல் வேட்பாளரும் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனுமான பாய்சங் பூட்டியா சிலிகுரி தொகுதியில் தோல்வியை தழுவினார். அங்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் அசோக் பட்டாச்சார்யா வெற்றி பெற்றார்.

அமைச்சர்கள் அமித் மித்ரா, பார்த்தா சாட்டர்ஜி, சுபத்ரா முகர்ஜி, பர்ஹாத் ஹக்கீம் உள்ளிட்டோரும் வெற்றி பெற்றுள்ளனர். அமைச்சர்கள் மணிஷ் குப்தா, சந்திரிமா பாட்டாச்சார்யா, நாராயண் சவுத்ரி, சபித்ரி மித்ரா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x