Published : 17 May 2022 07:50 AM
Last Updated : 17 May 2022 07:50 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பாகிஸ்தான், சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி எழுதிய “மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி” என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் கடந்த 11-ம் தேதி வெளியிட்டார். இந்த விழாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
கடந்த 2011-ம் ஆண்டில் சீனாவுக்கான இந்திய தூதராகப் பணியாற்றினேன். அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி சீனாவுக்கு வருகை தந்தார். அவரை முதல்முறையாக சந்தித்தேன். பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் சீனாவுக்கு வரும்போது அவர்களுக்கு தேவையான வசதிகளை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்வது வழக்கம்.
ஆனால் அன்றைய முதல்வர் நரேந்திர மோடியின் பயணம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவர் நள்ளிரவில் பெய்ஜிங் வந்தடைந்தார். அடுத்த நாள் காலை 7 மணிக்கே முதல் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய கூறினார். காலை 7 மணி முதல் தொடர்ச்சியாக 12 மணி நேரம் பல்வேறு சந்திப்புகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மதிய உணவுக்காக அரை மணி நேரம் மட்டும் எடுத்து கொண்டார். அவர் 4 நாட்கள் சீனாவில் தங்கியிருந்தார். அதற்குள் சீனாவின் 3 நகரங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டார்.
மோடியின் தனித்துவம்
மற்ற முதல்வர்களுடன் ஒப்பிடும்போது நரேந்திர மோடியிடம் தனித்துவம் தெரிந்தது. அவரது சிந்தனைகள், செயல்பாடுகள் வித்தியாசமாக இருந்தன. இந்திய, சீன பாதுகாப்பு உறவு குறித்து விளக்கி கூறுமாறு என்னிடம் மோடி கோரினார். அப்போது சீனாவுடன் பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக தனி விசா, எல்லை பிரச்சினை, தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளிடையே கசப்புணர்வு நீடித்தது.
இதுகுறித்து நரேந்திர மோடி கூறும்போது, ‘நான் குஜராத் முதல்வர் என்ற போதிலும், முதலில் இந்திய குடிமகன். நான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது இந்தியாவின் நிலைப்பாட்டில் இருந்து ஓர் அங்குலம்கூட விலகி விடக்கூடாது. அதற்காகத்தான் இந்திய, சீன உறவில் நாட்டின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விரும்புகிறேன்’ என்றார். சீனாவுக்கு பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் வந்து சென்றுள்ளனர். அவர்களில் நரேந்திர மோடி மட்டுமே இந்திய, சீன வர்த்தகத்தில் சமநிலை இல்லாதது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். அதுவும் எனக்கு வியப்பளித்தது. மாநில நலனை தாண்டி, தேசிய நலனில் அவர் அப்போதே அக்கறை கொண்டிருந்தார்.
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தை சேர்ந்த நகை வியாபாரிகள் வர்த்தக ரீதியாக சீனாவுக்கு வந்தனர். எதிர்பாராதவிதமாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க நரேந்திர மோடி அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.
தற்போது இந்திய பிரதமராக நாட்டை வழிநடத்தும் நரேந்திர மோடி, பாதுகாப்பை மையமாக கொண்டு நாட்டின் வெளியுறவு கொள்கையை வரையறுக்கிறார். பொருளாதார வளர்ச்சி, மக்களின் நலன்களை முன்னிறுத்தி ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை முன்னெடுத்து செல்கிறார்.
பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவரது முயற்சியால் “தீவிரவாதத்துக்கு எதிரான போர்“ சர்வதேச விவாதப் பொருளாகி உள்ளது.
காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுகளை வீசி அழித்தது. சிக்கிமின் டோக்லாம் மற்றும் லடாக் பகுதிகளில் அத்துமீற முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தீரத்துடன் எதிர்த்து விரட்டியடித்தனர். எந்தவொரு சவாலையும் இந்தியா துணிச்சலாக எதிர்கொள்ளும். ஒருபோதும் பின்வாங்காது என்பதை உலக நாடுகளுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளோம்.
பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த நாடுகளின் ரயில்வே கட்டமைப்பு, மின்சார வாகனங்களின் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாட்டை தடுக்கும் திட்டங்களை தீவிரமாக ஆய்வு செய்கிறார். அவற்றில் நல்ல திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்த ஆர்வம் காட்டுகிறார். அவர் வளர்ச்சியின் மீது தீராத தாகம் கொண்டவர்.
பிரபலமாகும் யோகா, ஆயுர்வேதம்
கரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டனர். உக்ரைன் போரில் சிக்கித் தவித்த இந்தியர்கள், ஆபரேசன் கங்கை திட்டத்தின் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தவித்த இந்தியர்கள், தேவி சக்தி ஆபரேசன் மூலம் மீட்கப்பட்டனர்.
இப்போது வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் துணிச்சலோடு செல்கின்றனர். எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் மத்திய அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியங்களை பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கிறார். அவரது முயற்சியால் யோகா, ஆயுர்வேதம் பிரபலமாகி வருகிறது.
பிரதமர் மோடி தேசியவாதி
இந்தியா, ஜனநாயகத்தை பின்பற்றும் நாடு அல்ல. ஜனநாயகத்தின் உரிமையாளர், சொந்தக்காரர். ஜனநாயகத்தை கண்டுபிடித்த நாடு என்று பெருமிதம் கொள்ளலாம். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு மேலும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா சார்பில் கரோனா தடுப்பூசிகள், மருந்துகள் அனுப்பப்பட்டன. பிரதமரின் முயற்சியால் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு முதலிடம் என்ற கொள்கையை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார். பிரதமரின் புத்தகம் அவரது பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. அவர் தொலைநோக்கு சிந்தனையாளர், பாரம்பரியத்தின் காப்பாளர், புதுமைகளை கொண்டாடும் புதுமைவாதி, சிறந்த தேசியவாதி, அதேநேரம் சர்வதேசவாதியும்கூட.
இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT