Last Updated : 17 May, 2022 06:07 AM

 

Published : 17 May 2022 06:07 AM
Last Updated : 17 May 2022 06:07 AM

சிவலிங்கம் இருப்பதாக விஎச்பி தலைவர், உ.பி. துணை முதல்வர் தகவல் - வாரணாசி கியான்வாபி மசூதி ஒசுகானாவுக்கு சீல்

வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில், வீடியோ பதிவு செய்யும் கள ஆய்வு பணி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த மசூதியை ஆய்வு செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்கள், மசூதியில் வீடியோ பதிவை நேரில் காண நேற்று வந்தனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இதன் வளாக சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனுக்கு நடந்த அன்றாட பூசை, 1991-ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து டெல்லியை சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ரவிக்குமார் திவாகர் விசாரித்து மசூதி முழுவதும் கள ஆய்வு நடத்தி வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கள ஆய்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த ஆய்வின் மீதான அறிக்கை வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த சூழலில், மனுதாரரின் வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் சார்பில் நேற்று மாலை வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கலானது. அதில், ‘‘சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும். அதுவரையில் முஸ்லிம்களை அதனுள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதை ஏற்ற நீதிபதி ரவிக் குமார், ஒசுகானாவை கையகப்படுத்தி சீல் வைத்து, மசூதிக்குள் 20 பேருக்கு மேல் தொழுகை நடத்த அனுமதிக்க கூடாது என்று வாரணாசி ஆட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிமன்ற உத்தரவின்படி மத்திய பாதுகாப்பு போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தும் உத்தரவையும் ஆட்சியர் உடனடியாக அமல்படுத்தினார்.

முன்னதாக, சிவலிங்கம் உள்ளது என்ற ஆதாரத்தை மசூதி நிர்வாகம் மறுத்துள்ளது. ஒசுகானாவில் காணப்படுவது சிவலிங்கம் அல்ல. அது அக்குளத்தின் பகுதியாக சேர்த்து கட்டப்பட்ட நீரூற்று என்று கூறியுள்ளனர். இதை குறிப்பிட்ட மசூதி தரப்பின் மனு பரிசீலனை செய்யும் முன்பாகவே நீதிமன்ற உத்தரவு வெளியானது.

இந்நிலையில் விஷ்வ இந்து பரிஷத்தின் சர்வதேச (விஎச்பி) தலைவர் அலோக் குமார் கூறும்போது, ‘‘கியான்வாபி மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம். சிவலிங்கம் இருப்பதே அங்கு கோயில் இருந்ததற்கான சாட்சி. இப்பிரச்சினையில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்’’ என்றார்.

கியான்வாபி கள ஆய்வில், முஸ்லிம்கள் கை, கால் சுத்தம் செய்யும் ஒசுகானாவில் 12.5 அடி உயர சிவலிங்கம் கிடைத்ததாக விஷ்வ வேதிக் சனாதன் சங் தலைவர் ஜிதேந்தர் சிங் நேற்று தெரிவித்தார். இவர், சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கில் பார்வையாளர்களில் ஒருவராக உள்ளார்.

உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘நீங்கள் எவ்வளவு உண்மையை மறைக்கிறீர்கள் என்பது உண்மையல்ல. ஆனால், உண்மை ஒரு நாள் வெளியாகும். ஏனெனில் அந்த உண்மை சிவன் ஆகும். பாபா கீ ஜெய்! ஹர் ஹர் மஹாதேவ்’’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த சிவில் வழக்கில் ஆய்வுக்கு உடனடியாக தடை விதிக்கக் கோரி மசூதியின் நிர்வாகம் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இம்மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x