உடல்நிலை மோசமானதால் கண்ணய்யா உண்ணாவிரம் வாபஸ்

உடல்நிலை மோசமானதால் கண்ணய்யா உண்ணாவிரம் வாபஸ்
Updated on
1 min read

ஜே.என்.யூ. பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தங்கள் மீது பிறப்பித்த தண்டனை உத்தரவை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்துவந்த கண்ணய்யா குமார், மோசமான உடல்நிலை காரணமாக தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

இது குறித்து ஜே.என்.யூ, மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கண்ணய்யா குமார் மோசமான உடல்நிலை காரணாமாக உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுகிறார்.

உண்ணாவிரதத்தை கைவிட்டாலும் பல்கலைக்கழக நிர்வாக முடிவுக்கு எதிராக தனது போராட்டத்தை அவர் தொடர்வார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அறிவுரை:

முன்னதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணய்யா குமார் கடுமையான நீர்சத்து இழப்பு மற்றும் கீடோஸிஸால் பாதிக்கபட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அவர் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்தே கண்ணய்யா குமார் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

உண்ணாவிரதம் எதற்காக?

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குரு தூக்கில் போடப்பட்டதற்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் மாணவர்கள் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

அதில், இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுதொடர்பாக, ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார், மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சாரியா ஆகியோர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர்.

இதற்கிடையே, ஜேஎன்யூ.வில் நடந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்த 5 பேர் உயர்மட்ட கமிட்டி பல்கலை. நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது.

அதன் அடிப்படையில், கண்ணய்யா குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர 13 மாணவர்களுக்கும் அபராதம் விதித்தது. உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா, முஜீப் ஆகியோர் தற்காலிகமாக பல்கலை.யில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி, கண்ணய்யா குமார் தலைமையில் 19 மாணவர்கள் பல்கலை வளாகத்தில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினர்.

இந்நிலையில், போராட்டம் தொடங்கி 10-வது நாளான இன்றைய நிலவரப்படி கண்ணய்யா உட்பட 6 மாணவர்கள் கடுமையான உடல்நல பாதிப்பு காரணமாக போராட்டத்திலிருந்து விலகியுள்ளனர். எஞ்சியவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. உடல் மெலிந்து காணப்படுகிறார்கள்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு:

இதற்கிடையே மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என ஜே.என்.யூ பல்கலைக்கழக துணை வேந்தர் ஜகதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in