Published : 16 May 2022 07:40 AM
Last Updated : 16 May 2022 07:40 AM

அசாம் வெள்ளத்தில் 25,000 பேர் பாதிப்பு: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகான் மாவட்டம் பகுலா குரி கிராமத்தை வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் சிறிய படகு மூலம் நேற்று பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். படம்: பிடிஐ

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கச்சார், கர்பி அங்லாங், தேமாஜி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 92 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணுவம், துணை ராணுவம், தீ மற்றும் அவசர கால சேவை துறை, மாநில பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்தவர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மலைகள் நிறைந்த திமா ஹசாவ் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவால் ரயில் மற்றும் சாலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, அசாமில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் ரூ.125 கோடியை விடுவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள அசாம் நீர்வளத் துறை அமைச்சர் பிஜுஷ் ஹசாரிகா, கூடுதல் நிதியுதவி வழங்க கோரியுள்ளார்.

கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் (20 செ.மீ.க்கு மேல்) திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் (6 முதல் 20 செ.மீ. வரை) விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x