Published : 15 May 2022 04:48 AM
Last Updated : 15 May 2022 04:48 AM

திரிபுரா முதல்வரை மாற்றியது ஏன்? - பின்னணி தகவல்கள்

அகர்தலா: திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக மாநில பாஜக தலைவர் மாணிக் சாஹா புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 36 இடங்களைக் கைப்பற்றியது. 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இதைத் தொடர்ந்து திரிபுராவின் 10-வது முதல்வராக பாஜக மூத்த தலைவர் பிப்லப் குமார் தேவ் கடந்த 2018 மார்ச் 9-ம் தேதி பதவியேற்றார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் 2 நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அவர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளின்போது திரிபுரா மாநில நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதன்பிறகு திரிபுரா தலைநகர் அகர்தலா திரும்பிய முதல்வர் பிப்லப் குமார் தேவ் நேற்று மாலை ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவை சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அவர் அளித்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கடந்த 4 ஆண்டுகளாக மாநிலத்தில் நல்லாட்சி நடத்தினேன். தற்போது கட்சி மேலிடத்தின் அறிவுரைப்படி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எல்லாவற்றையும்விட கட்சியே மேலானது. திரிபுராவின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். கட்சியில் என்ன பொறுப்பு கொடுத்தாலும் திறம்பட செயல்படுவேன்” என்று தெரிவித்தார்.

புதிய முதல்வர் தேர்வு

திரிபுராவின் புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் அகர்தலாவில் நேற்று மாலை நடைபெற்றது. மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக கூட்டத்தில் கலந்து கொண்டனர். அனைத்து எம்எல்ஏக்களிடமும் அவர்கள் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தனர்.

திரிபுரா மாநில பாஜக தலைவர் மாணிக் சாஹா, மன்னர் பரம்பரையை சேர்ந்த துணை முதல்வர் விஷ்ணு தேவ் வர்மா இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மாணிக் சாஹா புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

பல் மருத்துவரான மாணிக் சாஹா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டில் அவர் பாஜகவில் இணைந்தார். கடந்த 2020-ம் ஆண்டில் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த ஏப்ரலில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது மாநிலத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

மத்திய அமைச்சரும் மேலிட பார்வையாளருமான பூபேந்தர் யாதவ் கூறும்போது, “திரிபுரா பாஜக சட்டப்பேரவைத் தலைவராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் அவர் முதல்வராக திறம்பட செயல்படுவார். திரிபுராவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வார்” என்று தெரிவித்துள்ளார்.

பிப்லப் குமார் தேவ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “புதிய முதல்வர் மாணிக் சாஹாவுக்கு வாழ்த்துகள். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் திரிபுரா செழித்தோங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

புதிய முதல்வர் மாணிக் சாஹா நிருபர்களிடம் கூறும்போது, “பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பிப்லப் குமார் தேவ் எனது பெயரை முன்மொழிந்தார். மற்ற எம்எல்ஏக்கள் வழிமொழிந்தனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். நான் கட்சியின் அடிமட்ட தொண்டன். மாநிலத்தின் நலனுக்காகவும் கட்சியின் வளர்ச்சிக்காவும் அயராது பாடுபடுவேன்” என்று தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகையில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சாஹா பதவியேற்க உள்ளார்.

முதல்வரை மாற்றியது ஏன்?

திரிபுரா முதல்வர் மாற்றப்பட்டது குறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:

பிப்லப் குமார் தேவ் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று பாஜக எம்எல்ஏக்கள் புகார் கூறி வந்தனர். இதுதொடர்பாக 14 பாஜக எம்எல்ஏக்கள் அண்மையில் கட்சி மேலிடத்தில் புகார் அளித்தனர். மேலும் 2 பாஜக எம்எல்ஏக்கள் அண்மையில் கட்சி மாறினர்.

சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக கடந்த 11 மாதங்களில் உத்தராகண்ட், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மாற்றப்பட்டனர். திரிபுராவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு அந்த மாநிலத்திலும் முதல்வர் மாற்றப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x