Published : 15 May 2022 07:22 AM
Last Updated : 15 May 2022 07:22 AM

ஜிஎஸ்டி இழப்பீட்டை 3 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் - காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து

உதய்பூர்: காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை கூட்டம்’ ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 3 நாட்களுக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் மற்றும் அடுத்தடுத்து வரும் சட்டப்பேரவை மற்றும் 2024 மக்களவை பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக அரசியல், பொருளாதாரம், சமூக நீதி, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் கட்சி விவகாரம் ஆகிய 6 அம்சங்கள் குறித்து வரைவு அறிக்கை தயார் செய்வதற்காக சோனியா காந்தி ஏற்கெனவே தனித்தனி குழுவை அமைத்தார்.

இக்குழுவின் அறிக்கை பற்றி இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது. இதில் பொருளாதாரம் தொடர்பான குழுவுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைவராக நியமிக்கப்பட்டார். சிந்தனை கூட்டத்தின் 2-ம் நாளான நேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனிடையே, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய பொருளாதாரம் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதுதான், மத்தியில் கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசின் தனிச்சிறப்பு. பணவீக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உயர்ந்து வருகிறது. ஆனால், மத்திய அரசு தனது தவறாக கொள்கைகள் மூலம் பணவீக்க உயர்வை மேலும் ஊக்குவிக்கிறது.

இந்த நிலையை சமாளிக்க வழி தெரியாமல் மத்திய அரசு திணறுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களை கருத்தில் கொண்டு, பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.

சமுதாயத்தில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு, விளிம்பு நிலையில் உள்ள 10 சதவீத மக்கள் தொகையில் நிலவும் மோசமான வறுமை, சர்வதேச பசி குறியீட்டில் 2021-ல் இந்தியாவின் நிலை (116-ல் 101), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய கொள்கைகள் இருக்க வேண்டும்.

கடந்த 2017-ல் மத்திய அரசு ஜிஎஸ்டி நடைமுறையை முறையாக திட்டமிட்டு அமல்படுத்தாததே இப்போதைய பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம்.

ஜிஎஸ்டி அமலானபோது மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இது வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.

இங்கு நடைபெறும் சிந்தனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்களின் அடிப்படையில், காங்கிரஸ் செயற்குழு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x