

திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களின் வலி மிகுந்த வாழ்வை மையப்படுத்தி, இயக்குநர் ஆர்.பி.அமுதன் இயக்கிய 'டாலர் சிட்டி' ஆவணத் திரைப்படம் பெங்களூருவில் நேற்று திரையிடப்பட்டது.
மதுரையை சேர்ந்த இயக்குநர் ஆர்.பி. அமுதன் திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களின் வலி மிகுந்த வாழ்வை மையமாக கொண்டு ‘டாலர் சிட்டி' என்ற பெயரில் ஆவணப்படத்தை இயக்கி உள்ளார். இந்த ஆவணப்படம் பெங்களூரு ஃபிலிம் சொசைட்டி மற்றும் சி.ஐ.இ.டி.எஸ். ஆகிய அமைப்புகளின் சார்பாக பெங்களூரு ஜெயபாரத் நகரில் நேற்று திரையிடப்பட்டது.
இதில் இயக்குநர் ஆர்.பி. அமுதன் உட்பட ஏராளமான சமூக ஆர்வலர்களும், பெண்ணிய செயற்பாட்டாளர்களும், பின்ன லாடை ஊழியர்களும் கலந்து கொண்டனர். 77 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்தில் பின்னலாடை நிறுவனங்களின் தொடக்கம், கைத்தறி நெசவாளர்களின் முடிவு, ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பணியாற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகள், தொழிற்சங்க செயற்பாடுகள் ஆகியவை விரிவாக அலசப்படுகிறது. அதே நேரத்தில் அழகிய கிராமமாக இருந்த திருப்பூர் இன்று உலக நகரமாக மாறி சுற்றுச்சூழல், நொய்யல் ஆறு மாசுபட்ட நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.