

அகர்தலா: திரிபுரா மாநில முதல்வர் பிப்லவ் குமாா் தேவ் தனது பதவி விலகிய நிலையில் புதிய முதல்வராக மாநிலங்களவை எம்.பி. மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டுகளாக ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. முதல்வராக பிப்லப் குமார் தேவ் பதவி வகித்து வந்தார். அங்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் திரிபுரா மாநில முதல்வர் பிப்லவ்குமாா் தேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சனிக்கிழமை அளித்துள்ளார். சர்ச்சைப் பேச்சு, சர்சைக்குரிய முடிவுகள் என விப்லவ்குமாா் தேவ் மீது பெரிய அளவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
முடிவுகளை அவர் ஒருவரே எடுத்ததால் பாஜக எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தி இருந்தனர். பாஜக நிர்வாகிகள் சிலர் அண்மையில் திரிணமூல் காங்கிரஸிலும் இணைந்தனர். இந்த சூழலில் அவர் பதவி விலகியுள்ளார். நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிப்லவ் குமாா் தேவ் சந்தித்த நிலையில், பாஜக தலைமை இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
புதிய முதல்வர் தேர்வு
இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்ய தலைநகர் அகர்தாலாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடந்தது. மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தின் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் ஷாகா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மாணிக் சஹா தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகவுள்ளார்.
67 வயதான பல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் திரிபுராவின் ஒரே மாநிலங்களவை எம்.பி.யாக பாஜக சார்பில் தேர்வானவர்.
திரிபுரா மருத்துவக் கல்லூரி மற்றும் அகர்தலாவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் நினைவு போதனா மருத்துவமனையின் பேராசிரியரும், துறைத் தலைவருமான டாக்டர் சஹா, 2016ல் பாஜகவில் சேர்ந்தார். திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.