ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய சர்ச் வழங்கிய திருமண சான்றை ஆதாரமாக ஏற்க முடியாதது ஏன்?: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய சர்ச் வழங்கிய திருமண சான்றை ஆதாரமாக ஏற்க முடியாதது ஏன்?: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
Updated on
1 min read

மும்பை: திருமணத்துக்குப் பிறகு பெண்களின் பெயரில் மாற்றம் ஏற்படுகிறது. சில பெண்கள், கணவரின் பெயரை தங்கள் பெயரோடு இணைத்து கொள்கின்றனர். சிலர் தங்களது முதல் எழுத்தை மாற்றிக் கொள்கின்றனர். இதற்கேற்ப ஆதார், பான் எண், வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் பெண்கள் தங்களது பெயர்களில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் எழுகிறது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பெண் மரிசா அல்மைதாவுக்கு (27) கடந்த ஆண்டு டிசம்பரில் உள்ளூர் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு அவர் தனது ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தார்.

அப்போது கத்தோலிக்க கிறிஸ்தவ பேராயம் அளித்த திருமண சான்றிதழை, ஆவணமாக சமர்ப்பித்தார். ஆனால் ஆதார் அலுவலகத்தில், கிறிஸ்தவ திருமண சான்றிதழ் அத்தாட்சியாக ஏற்கப்படவில்லை.

சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். இல்லையெனில் கிறிஸ்தவ திருமண பதிவாளர் முன்பு திருமணம் செய்திருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால் அரசிதழில் பெயரை மாற்றம் செய்ய வேண்டும்.

இந்த வகைகளில் பெறப்படும் சான்றிதழை மட்டுமே அத்தாட்சியாக ஏற்க முடியும் என்று ஆதார் அலுவலக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆதார் அலுவலகம் மட்டுமன்றி மகாராஷ்டிர அரசு அலுவலகங்களிலும் கிறிஸ்தவ திருமண சான்றிதழ் அத்தாட்சியாக ஏற்கப்படுவது இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மரிசா அல்மைதா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கத்தோலிக்க கிறிஸ்தவ பேராயம் வழங்கும் திருமண சான்றிதழை அதிகாரபூர்வ ஆவணமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

நீதிபதிகள் ரேவதி மோகித தேரே, மாதவ் ஜம்தார் அமர்வு வழக்கை விசாரிக்கிறது. அண்மையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கிறிஸ்தவ திருமண சான்றிதழ் விவகாரம் குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in