Published : 13 May 2022 06:08 AM
Last Updated : 13 May 2022 06:08 AM
வாரணாசி: வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகேயுள்ள கியான் வாபி மசூதியில் மே 17-ம் தேதிக்குள் வீடியோ எடுக்கும் பணியை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதையடுத்து அங்கு களஆய்வு மேற்கொண்டு மே 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மசூதிக்குள் படம்பிடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து வாரணாசி நீதிமன்றம் நேற்று விசாரித்தது. நீதிபதிகள் உத்தரவில், “மனுதாரர்கள் கேட்டபடி மசூதியின் உள்பகுதி, அடித்தளம் உட்பட அனைத்து இடங்களிலும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். களஆய்வுப் பணி மே 17-ம் தேதிக்குள் முடிவடைய வேண்டும்” என்று தெரிவித்தனர்.
மனுதாரர்களின் வழக்கறிஞர் சுபாஷ் நந்தன் சதுர்வேதி கூறுகையில், “களஆய்வுப் பணி மேற்கொள்பவர்கள் தடுப்புகளை தாண்டிச் செல்ல பூட்டுகள் உடைக்கப்படும். இதை யாராவது தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கள ஆய்வுப் பணிக்கு மேலும் 2 ஆணையர்களை நீதிமன்றம் நியமித்துள்ளது. தற்போது மொத்தம் 3 பேர் உள்ளனர்” என்றார்.
கியான்வாபி மசூதி வழக்கறிஞர் அபே நாத் யாதவ் கூறுகையில், நீதிமன்றத்தின் உத்தரவு சட்ட விரோதம் என மசூதி நிர்வாக குழு தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து நாங்கள் மேல் முறையீடு செய்வோம்” என்றார்.
மசூதி குழுவின் இணை செயலாளர் சையது முகமது யாசின் கூறுகையில், “கியான்வாபி மசூதியை சுற்றி தடுப்புகள் உள்ளன. அதை திறந்து வீடியோ எடுக்க வேண்டும் என மனுதாரர்கள் விரும்புகின்றனர்” என்றார்.
நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி பிறப்பித்த உத்தரவுப்படி, மசூதியின் தடுப்புகளை தாண்டி உள்ளே சென்று வீடியோ எடுக்க முடியும் என மனுதாரரின் வழக்கறிஞர் சிவம் கவுர் கூறுகிறார்.
மசூதிக்குள் வீடியோ எடுக்க நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை, தடுப்புகளுக்கு வெளியேயுள்ள பகுதியை வீடியோ எடுக்க மட்டுமே நீதிமன்றம் அனுமதித்ததாக மசூதி நிர்வாகம் கூறியுள்ளது. நீதிமன்ற உத்தரவு இல்லாமலேயே ஆனையர் அஜய் குமார் மிஷ்ரா, கியான்வாபி மசூதிக்குள் வீடியோ எடுக்க முன்பு முயன்றார் என மசூதி நிர்வாக குழு குற்றம் சாட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT