ரூ.5 ஊதிய உயர்வை திருப்பி அளித்து மோடிக்கு தொழிலாளர்கள் கலாய்ப்புக் கடிதம்

ரூ.5 ஊதிய உயர்வை திருப்பி அளித்து மோடிக்கு தொழிலாளர்கள் கலாய்ப்புக் கடிதம்
Updated on
1 min read

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வரும் ஜார்கண்ட் மாநில ஊழியர்களுக்கு ரூ.5 ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.162ஆக இருந்த ஊதியம் ரூ.167ஆக உயர்த்தப்பட்டது. அதாவது ரூ.5 மட்டுமே உயர்த்தப்பட்டதை அடுத்து கிராம சுயராஜ்ஜிய மஸ்தூர் சங்கத்தின் கீழ் பல்வேறு தொழிலாளர்கள் தனித்தனியான கவர்களில் ரூ.5-ஐ திருப்பி அளித்து கேலித் தொனியுடன் பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தின் குறைந்தபட்ச தினக்கூலி ரூ.212 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசாங்கம் கடும் பணத் தட்டுப்பாட்டில் இருப்பதால் எங்களுக்கு ரூ.5 மட்டுமே உயர்த்தியுள்ளது எனவே அரசின் கஷ்டத்தை உணர்ந்து நாங்கள் இந்த 5 ரூபாய் ஊதிய உயர்வை திருப்பி அளிக்கிறோம் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கேலியாக இந்த அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

“ஆனாலும் மற்ற 17 மாநிலங்களின் ஊதிய உயர்வைப் பார்க்கும் போது நாங்கள் அதிர்ஷ்டசாலிகளே, அங்கு ரூ.5க்கும் கீழ்தான் ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. ஒடிசா மாநில தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்படவில்லை, அவர்கள் வளமாக இருப்பதாகத்தானே அர்த்தம்” என்று மேலும் கேலியாக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் தங்களது பணத் தேவையை விட மத்திய அரசின் பணத்தேவை அதிகமாக இருக்கிறது ஏனெனில் அரசுக்கு செலவுகள் அதிகம், ‘எனவே, இத்தனை அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளர்களான நாங்கள், உயர்த்தப்பட்ட ரூ.5-ஐ திருப்பி அரசுக்கே அளிக்கிறோம்” என்று கடிதத்தில் கூறி கீழே ‘தொழிலாளர்’ என்று அனுப்புநர் இடத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in