

அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்த, பிருத்வி -2 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி, பிருத்வி ஏவுகணைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில், பிருத்வி-2 ரக ஏவுகணை நேற்று காலை 9.05 மணிக்கு வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது பிருத்வி-2 ஏவுகணை என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, 500 கிலோ முதல் 1000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தும் திறன் படைத் தது. 350 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “பிருத்வி-2 ஏவு கணையை ஒரே நாளில் 2 முறை பரிசோதித்து பார்க்க திட்டமிடப் பட்டது. எனினும், முதல் பரிசோ தனை வெற்றியடைந்த பிறகு சில தொழில்நுட்ப சிக்கல்களால் 2-வது பரிசோதனை நடத்தப்படவில்லை” என்றனர்.
கடந்த 2003-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பிருத்வி ரக ஏவு கணை சேர்க்கப்பட்டது. அதன் பிறகு ஏவுகணையை மேம்படுத்தி அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.