

ஆந்திர மாநில ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் 35-வது மாநாடு திருப்பதியில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர்கள் அஷோக் கஜபதி ராஜு, சுஜனா சவுத்ரி உட்பட மாநில அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், எம்எல்சி.க்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
முன்னதாக நேற்று காலை மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள 3டி அரங்கு, புகைப்பட கண்காட்சி, ரத்ததான முகாம் போன்றவற்றை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். பின்னர் மாநாட்டு மேடையின் அருகே கட்சிக்கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தெலுங்குத் தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது.
மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
தெலுங்கு மக்களின் ஆத்ம கவுரவத்திற்காக உருவான கட்சிதான் தெலுங்கு தேசம் கட்சி. கடந்த 35 ஆண்டுகளாக மக்கள் நலனில் அக்கறையோடு இக்கட்சி பணியாற்றி வருகிறது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மாநில மக்களுக்கு நிரந்தர தலைநகர் கூட இல்லாத நிலை ஏற்பட்டது. இதற்காக அமராவதி உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. வரும் 2020-ம் ஆண்டில் நாட்டிலேயே அனைத்து துறையிலும் ஆந்திர மாநிலம் முன்மாதிரி மாநிலமாக திகழும் எனும் நம்பிக்கை உள்ளது. இதற்காக நான் இரவும், பகலும் பாடுபட்டு வருகிறேன். இதுவரை மாநில வளர்ச்சிக்காக பிரதமர் மோடியை 19 முறை சந்தித்து பேசி உள்ளேன். ஆனால் நாம் கேட்டது இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை. மத்திய அரசுதான் ஆந்திர மாநில வளர்ச்சியில் உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸார், அனைத்து நலத்திட்டங்களையும் விமர்சிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். அமராவதி தலைநகரம் உருவாகாமல் தடுக்கவும் சிபிஐ விசாரணை வேண்டுமென கோருகின்றனர். அணை கட்டும் விஷயங்களிலும் அரசியல் செய்கின்றனர். நான் மக்கள் பக்கம் நின்று ஆட்சி நடத்துபவன். அவர்களுக்காக என் கடைசி மூச்சு உள்ள வரை போராடுவேன்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.