Published : 11 May 2022 06:40 AM
Last Updated : 11 May 2022 06:40 AM
சண்டிகர்: பஞ்சாப் போலீஸ் உளவுத் துறை தலைமை அலுவலகம் மீது நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக என்ஐஏ மற்றும் மத்திய உளவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப்பின் மொகாலியில் உள்ள போலீஸ் உளவுத் துறை தலைமை அலுவலகம் மீது நேற்று முன்தினம் காலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது.
இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள், மத்திய உளவுத் துறை அதிகாரிகள், ரா பிரிவு அதிகாரிகள், ராணுவம், எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
பஞ்சாபில் இதற்கு முன்பு கையெறி குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முதல்முறையாக ஆர்பிஜி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. இந்த ஏவுகணையை தனிநபர் ஒருவர் தோளில் இருந்து ஏவ முடியும். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள தீவிரவாத அமைப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தும் தலிபான்களே, ஆர்பிஜி ஏவுகணைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க கூட்டுப் படைகள் வெளியேறியபோது ஏராளமான ஆயுதங்களை கைவிட்டு சென்றன. அந்த ஆயுதங்களை தலிபான்கள் பயன்படுத்தி வருகின்றனர். காஷ்மீரில் அண்மையில் நடந்த என்கவுன்ட்டர்களின்போது அமெரிக்க, பிரிட்டிஷ் வகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
தற்போது மொகாலி தாக்குதலில் தலிபான்களின் ஆர்பிஜி ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மொகாலி தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஒரு கார் சந்தேகத்துக்கு இடமாக நிற்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீக்கிய அமைப்பு பொறுப்பேற்பு
இதுகுறித்து சீக்கியருக்கான நீதி (எஸ்எப்ஜே) அமைப்பின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பன்னு வெளியிட்ட வீடியோவில், ‘‘மொகாலியில் உள்ள போலீஸ் உளவுத் துறை தலைமை அலுவலகம்மீது நாங்களே தாக்குதல் நடத்தினோம். சீக்கியர்களை சீண்டினால் பதிலடி கொடுப்போம்’’ என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT