Published : 11 May 2022 05:26 AM
Last Updated : 11 May 2022 05:26 AM

அசாமில் கடந்த 8 ஆண்டுகளில் 23 மாவட்டங்களில் ஆயுதப்படை சட்டம் வாபஸ் - விரைவில் மாநிலம் முழுவதும் ரத்தாகும் என அமித் ஷா நம்பிக்கை

புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளில் அசாமில் 23 மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் இந்த சட்டம் அகற்றப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக அசாம் சென்றுள்ளார். பயணத்தின் 2-ம் நாளான நேற்று குவாஹாட்டியில் நடைபெற்ற விழாவில், அசாம் காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி விருதை வழங்கினார். கவுரவமிக்க இந்த விருது, கடந்த 25 ஆண்டுகளில் அசாம் காவல் துறையின் முன்மாதிரியான சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. விழாவில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

1990-களில் அசாமில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் 7 முறை நீட்டிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடியின் ஆட்சியில் அசாமின் 60% பகுதிகளில் இருந்து அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மத்திய அரசு மற்றும் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவின் முயற்சியால் பெரும்பாலான தீவிரவாத அமைப்புகள் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. தீவிரவாதம் மற்றும் வன்முறையில் இருந்து அசாம் விரைவில் விடுபடும்.

கடந்த 8 ஆண்டுகளில் அசாமில் 23 மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. விரைவில் ஒட்டுமொத்த அசாமில் இருந்தும் இந்த சட்டம் அகற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

அசாம் காவல்துறை, அரசியல் சாசன ஒழுங்கை பராமரிக்க தீவிரவாதப் பிரச்சினைக்கு எதிராக நின்றது. காவல்துறையினர் துப்பாக்கிகளை துப்பாக்கியால் எதிர்கொண்டனர். திசை திருப்பப்பட்ட இளைஞர்களை தேசிய நீரோட்டத்துக்கு கொண்டு வந்தனர். சரண் அடைந்து தேசிய நீரோட்டத்துக்கு திரும்பியவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மறுவாழ்வு அளித்து வருகின்றன.

வடகிழக்குப் பிராந்தியத்தில் பல ஆண்டு கால எல்லைப் பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படுகின்றன. எல்லைப் பிரச்சினை, ஆயுதங்கள், போதைப் பொருள் மற்றும் கால்நடைகள் கடத்தல், காண்டாமிருக வேட்டை என பல்வேறு பிரச்சினைகளை அசாம் காவல்துறை வெற்றிகரமாக சமாளித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் முன்மாதிரியான சேவையாற்றியுள்ளது. குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி விருதுக்கான தகுதியை அசாம் காவல்துறை முழுவதும் பெற்றுள்ளது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

விழாவில் அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, மாநில காவல்துறை இயக்குநர் பாஸ்கர்ஜோதி மகந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல் துறை பிரிவுக்கு குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி விருது வழங்கப்படுகிறது.

படைப்பிரிவுக்கு வழங்கப்பட்ட கொடியின் பிரதியை படையின் அனைத்து அதிகாரிகளும், அணிகளும் தங்கள் சீருடையில் அடையாளமாக அணியலாம். அசாம் காவல்துறைக்கு வழங்கப்பட்ட கொடியில் மாநிலத்தின் 36 மாவட்டங்கள், அசாம் காவல் துறை சின்னம் மற்றும் மாநில விலங்குடன் (ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்) மாநில வரைபடம் உள்ளது.

குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி விருதை பெறும் நாட்டின் 10-வது மாநிலம் அசாம் ஆகும். இதற்கு முன் இந்த விருதை டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x