Published : 11 May 2022 05:50 AM
Last Updated : 11 May 2022 05:50 AM
புதுடெல்லி: வரும் ஆண்டுகளில் ஒரு லட்சம் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பைலட்கள் இந்தியாவுக்குத் தேவைப்படுவர் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.
ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க மூன்று கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதில் முதலாவதாக அதற்குரிய எளிய கொள்கைகளை வகுத்து அதை விரைவாக செயல்படுத்துவது ஆகும். 2-வதாக ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்க அதற்குரிய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மூன்றாவதாக அதற்கான தேவையை அதிகரிக்கச் செய்வதாகும்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு சலுகை (பிஎல்ஐ) திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் உற்பத்தி அதிகரிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது ட்ரோன்கள் உற்பத்திக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
பிஎல்ஐ திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உள்நாட்டிலேயே ட்ரோன்கள் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக எளிய கொள்கைகளை சிவில் ஏவியேஷன் அமைச்சகம் வெளியிட்டது. தற்போது பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள்கூட ட்ரோன் பைலட்டாக பயிற்சி மேற்கொண்டு அதை இயக்க முடியும். இதற்கு கல்லூரி படிப்பு தேவையில்லை. இரண்டு அல்லது மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலை நிச்சயம் கிடைக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில் 1 லட்சம் ட்ரோன் பைலட்டுகளுக்கான தேவை உள்ளது. இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.
எங்கு பயன்படுகிறது
ட்ரோன்கள் பறக்கவிடுவதற்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிகளை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்டது. இதன்படி 250 கிராமுக்குக் குறைவான பார்சல்களை எடுத்துச் செல்லும் ட்ரோன்களுக்கு லைசென்ஸ் பெறத் தேவையில்லை. ட்ரோன்கள் மூலம் பார்சல்களை டெலிவரி செய்வது மட்டுமின்றி வயல்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கவும், புகைப்படம் எடுப்பதற்கும் அடர்ந்த வனப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிக்கும் ட்ரோன்களை பயன்படுத்த முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT