ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் திடீர் மோதல்: மாணவிகளை மானபங்கப்படுத்த முயற்சி - நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் திடீர் மோதல்: மாணவிகளை மானபங்கப்படுத்த முயற்சி - நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு
Updated on
1 min read

மேற்குவங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் திரையிடுவதில் இரு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினை மோதலில் முடிந்தது. அப்போது மாணவிகளை சிலர் மானபங்கப்படுத்த முயற்சித்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

‘ஹேட் ஸ்டோரி’, ‘கோல்’ போன்ற திரைப்படங்களின் இயக்குனரான அக்னிஹோத்ரி சமீபத்தில் ‘புத்தா இன் ய டிராபிக் ஜாம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் திரையிட முடிவு செய்யப்பட்டது. தலித் மற்றும் பழங்குடியின மக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் இந்த திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, படத்தை திரையிடுவதற்கு இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கடைசி நேரத்தில் படத்தை திரையிடும் முடிவு கைவிடப்பட்டு அதற்கான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. எனினும் திறந்தவெளியில் படத்தை திரையிட, திரைப்படக் குழு முடிவு செய்தது. இதற்காக பல்கலைக் கழக வளாகத்துக்கு வந்த திரைப்பட இயக்குனர் அக்னி ஹோத்ரியை மாணவர்களில் ஒருபிரிவினர் தடுத்து நிறுத்தி அவரது கார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவரது காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. பாஜக வேட்பாளரும், நடிகையுமான ரூபா கங்குலியும் பல்கலைக்கழக கேட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

இதனால் ஆவேசமடைந்த மாணவர்களின் மற்றொரு பிரிவினரும், ஏபிவிபி தொண்டர்களும் இணைந்து கடும் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மாணவிகள் சிலரை மானபங்கப்படுத்தும் முயற்சிகளும் நடந்துள்ளன.

இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் சுரஞ்சன் தாஸ் கூறும்போது, ‘‘வெளியில் இருந்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் தான் மாணவிகளை மானபங்கபடுத்த முயற்சித் துள்ளனர். இது தொடர்பாக நான்கு பேரை போலீஸில் பிடித்துக் கொடுத்துள்ளோம்’’ என்றார்.

இதற்கிடையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மேற்கு வங்க மாநில ஆளுநர் கே.என்.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடந்த இந்த மோதல் சம்பவத்தை கண்டித்து மாணவர்களின் ஒருபிரிவினர் நேற்று கண்டன பேரணிக்கு அழைப்பு விடுத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in