ஆந்திராவில் இளம் பெண்ணை சுட்டுக் கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை

ஆந்திராவில் இளம் பெண்ணை சுட்டுக் கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை
Updated on
1 min read

ஆந்திராவில் இளம் பெண்ணை சுட்டுக் கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். ஒரு தலை காதலே காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தடிபர்தி கிராமத்தைச் சேர்ந்தவர் காவ்யா ரெட்டி. இவர் புனேவைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணி புரிந்துவந்தார். கரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக அவர் வீட்டிலிருந்து பணி புரிந்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் மலபதி சுரேஷ் ரெட்டி. இவர் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒராண்டுக்கும் மேலாக இவரும் வீட்டிலிருந்தே பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஐடி ஊழியரான காவ்யாவை சுரேஷ் ரெட்டி நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து நெல்லூர் போலீஸ் எஸ்.பி. விஜய ராவ் கூறுகையில், "சுரேஷ் ரெட்டி ஒருதலையாக காவ்யாவை காதலித்து வந்துள்ளார். காவ்யாவுக்கு அவர் அடிக்கடி தொலைபேசியில் தொந்தரவு கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் தனது பெற்றோரை காவ்யாவின் வீட்டிற்கே அனுப்பி தனக்காக பெண் கேட்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் காவ்யா வீட்டில் பெண் தர மறுத்துவிட்டனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களாகவே சுரேஷ் கடும் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் காவ்யாவின் வீட்டிற்குச் சென்ற சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் காவ்யாவை நோக்கி இரண்டு முறை சுட்டுள்ளார். முதல் குண்டு கட்டிலில் பாய்ந்துவிட. இரண்டாவது குண்டு காவ்யாவின் தலையில் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வீட்டிலிருந்து தப்பியோடிய சுரேஷ் சுவர் ஏறிக் குதித்து தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்துவருகிறது" என்றார்.

ஆனால், ஆத்மகுரு சரக டிஎஸ்பி வெங்கடேஷ்வர ராவ் கூறுகையில், "காவ்யாவின் குடும்பத்தினர் தான் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவ்யாவுக்கு சுரேஷ் மீது விருப்பம் தான். கடனைக் காரணம் காட்டி காவ்யாவின் பெற்றோர் திருமணத்தை மறுத்துவிட ஆத்திரமடைந்த சுரேஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்காக ஒரு நாட்டுத் துப்பாக்கியை வாங்கியுள்ளார்" என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்து போலீஸார் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in