Published : 10 May 2022 07:35 AM
Last Updated : 10 May 2022 07:35 AM

100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்: ஜார்க்கண்ட் ஐஏஎஸ் அதிகாரி வங்கிக் கணக்குகளில் ரூ.1.43 கோடி டெபாசிட் - அமலாக்கத்துறை தகவல்

பூஜா சிங்கால்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.18 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 2008 முதல் 2011 வரையில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக, இளநிலை பொறியாளர் ராம் வினோத் பிரசாத் சின்ஹா மீது மாநில ஊழல் தடுப்புபிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில், சின்ஹா மீது அமலாக்தத் துறையினர் 2012-ல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 2020-ம் ஆண்டு ஜூன் 17-ம்தேதி அவரை கைது செய்தனர். சின்ஹாவிடம் நடத்திய விசாரணையில், மாவட்ட நிர்வாகத்துக்கு 5 சதவீதம் கமிஷன் வழங்கியதாக தெரிவித்தார். அந்த காலகட்டத்தில் மாவட்ட துணை ஆணையராக பூஜா சிங்கால் பதவி வகித்தார். இவர் இப்போது மாநில சுரங்கத் துறை செயலாளராக உள்ளார். பூஜாவின் கணவர் அபிஷேக் ஜா தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட், பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பூஜா சிங்காலுடன் தொடர்புடைய 18 இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த 6-ம்தேதி சோதனை நடத்தினர். இதில் பட்டய கணக்காளரும் நிதி ஆலோசகருமான சுமன் குமாருக்கு சொந்தமான இடத்திலிருந்து ரூ.17.49 கோடி உட்பட மொத்தம் ரூ.19 கோடி கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, சுமன் குமாரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரை ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, இந்த ஊழல் நடந்த 2008 முதல் 2011 வரையிலான காலத்தில் பூஜா மற்றும் அவரது கணவர் அபிஷேக் ஜா ஆகியோரின் வங்கிக் கணக்கில் ரூ.1.43 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்தது. பூஜா குமாரிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x