ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்

பள்ளிவாசல் முன்பு நிதி திரட்டிய முஸ்லிம்கள்.
பள்ளிவாசல் முன்பு நிதி திரட்டிய முஸ்லிம்கள்.
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் பாபு (38) ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த 5 மாதங்களாக அவர் ஆட்டோ ஓட்டவில்லை.

இப்போது சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ராகேஷ் பாபு, கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது அறுவை சிகிச்சைக்காக மலப்புரத்தில் உள்ள இருபதுக்கும் அதிகமான பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் நிதி பிரித்தனர்.

ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக அந்த தொழுகை நேரத்தில் மட்டும் 1.38 லட்சம் ரூபாய் நிதி திரண்டது. அவர்கள் நிதி பிரித்த பக்கெட்டில் ‘ராகேஷ் பாபு சிகிச்சை நிதி” என்று எழுதப் பட்டிருந்தது.

ராகேஷ் பாபுவின் சிகிச்சைக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டியின் செயலாளர் பாசிம்பாரி, “நிதி திரட்டி சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று மட்டுமே நினைத்தோம். அவரது மதம் பற்றி சிந்திக்கவே இல்லை. அவரது அம்மாவின் சிறுநீரகம் அவருக்குத் தானமாக வழங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிறது. அப்போதே அவரது சொந்த வீட்டை விற்றுதான் அறுவை சிகிச்சை நடந்தது. தானம் பெற்ற சிறுநீரகமும் சேதமானது. மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய ரூ.15 லட்சம் செலவாகும்.. நாங்கள் விரைவிலேயே மீதித் தொகையையும் திரட்டுவோம். இதை நாங்கள் சொன்னதும், மசூதிகளின் இமாம்களும் ஏற்றுக் கொண்டனர் ” என்றார்.

கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே மத ரீதியான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 6 மாதங்களில் மட்டும், இரு தரப்பிலும் சேர்த்து 5 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த சூழலில் இந்த மனிதநேயச் செயல் இரு சமூக புரிதலுக்கு துணைநிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in