மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்ற அவசர சட்டம்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்ற அவசர சட்டம்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்
Updated on
2 min read

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியுள்ள உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றும் வகையில் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு களுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோரிய சில மாநில அரசுகள், சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இதுதொடர்பாக மக்களவையில் நேற்று கட்சி பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் பிரச்சினை எழுப்பினர். இதுதொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரப் பட வேண்டும் என அரசுக்கு ஆலோசனை தெரிவித்தனர்.

அப்போது பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, “பொது நுழைவுத் தேர்வுதான் அரசின் விருப்பம். மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் தேவை என்பதை நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்கும். நீதிமன்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சி செய்வோம்” எனத் தெரிவித்தார்.

மாநில மொழி

இதனிடையே, 2016-17-ம் கல்வியாண்டில் மருத்துவ நுழைவுத் தேர்வை 6 மாநில மொழிகளில் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அனுமதி கோரியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சத்தவ் பேசும்போது, “இப்பிரச்சினையில் அரசு உடனடியாக கவனம் செலுத்தி, ஒன்று அவசர சட்டம் இயற்ற வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுக வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் அரசு உரிய முறை யில் வாதிடவில்லை” என்றார்.

பிஜு ஜனதா தளம் எம்.பி. ததாகத் சத்பதி பேசும்போது, “இதற்கு முன்பு மாநில மொழிகளில் தேர்வெழுத அனுமதித்த உச்ச நீதிமன்றம் பிறகு அதை மாற்றி விட்டது. மத்திய அரசின் பலவீனமான வாதம்தான் அதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பொது நுழைவுத் தேர்வு நடப்பாண்டு ஒத்தி வைக்கப்பட வேண்டும். இதனை நீதிமன்றத்துக்கு தெரிவித்துவிட் டால், அமைதி நிலவும்” என்றார்.

“தேர்வு நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள மாநில மொழிகள் பட்டியலில் பஞ்சாபி மொழி இல்லை. எனவே, அதனையும் சேர்க்க வேண்டும்” என சிரோமணி அகாலிதளம் எம்.பி. பிரேம் சிங் சந்துமஜ்ரா கோரிக்கை விடுத்தார்.

திமுக வலியுறுத்தல்

திமுக எம்.பி. கே.பி. ராமலிங்கம் மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாவது:

இது முக்கியமான பிரச்சினை. ஒவ்வோர் மாநில அரசுக்கும் பாடத் திட்டத்தை வடிவமைக்க உரிமை உள்ளது. ஆனால், தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (என்இஇடி) மாநில மொழிகளில் பயிலும் மாண வர்களின் எதிர்காலத்தை அழித்து விடும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் சிபிஇசி-ஐ அடிப்படையாகக் கொண்டது. இது முற்றிலும் சட்டவிரோதமானது.

வெவ்வேறு கல்விப் பின்புலத்தைக் கொண்ட கிராமப்புற மாணவர்களை அழிக்கும் முயற்சி. கடந்த 2007-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு சட்டத்தின் மூலம் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. தமிழகத்தைப் போலவே பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை பல்வேறு மாநிலங்கள் அனுமதிக் கின்றன. இம்மாநிலங்கள் தங்களின் பாடத்திட்டத்துக்கும், மத்திய பாடத் திட்டத்துக்கும் மிகப்பெரிய வேறு பாடு இருப்பதாக நம்புகின்றன. தேசிய நுழைவுத் தேர்வுக்காக தனி யாக தயாரவது என்பது மாணவர் களுக்கு இயலாத காரியம்.

சிபிஇசி அல்லது வேறு பாடத்திட்டத்தின் அடிப்படையில் சமச்சீரான நுழைவுத் தேர்வை அமல் செய்யும் வரை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். பொது நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டால், மாணவர் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in