ரூ.2,500 கோடி கொடுத்தால் கர்நாடக முதல்வர் பதவி: டெல்லி தலைவர்கள் பேரம் பேசியதாக பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

பசனகவுடா பாட்டீல்
பசனகவுடா பாட்டீல்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியில் நேற்று முன்தினம் மாலை முன்னாள் மத்திய அமைச்சரும் விஜயப்புரா பாஜக எம்எல்ஏவுமான பசனகவுடா பாட்டீல் யத்னால் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:

தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருகிறேன், அமைச்சர் பதவி வாங்கி தருகிறேன் எனக் கூறும் திருடர்கள் அதிகரித்துவிட்டார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்திக்க வைப்பதாகக் கூறி பணம் கேட்கிறார்கள்.

தற்போது அமைச்சராக இருக்கும் முருகேஷ் நிரானி, ரூ.50 கோடி, ரூ.100 கோடி கொடுத்தே அந்தப் பதவிக்கு வந்திருக்கிறார். எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடாது என்பதற்காகவும் அவர் செலவு செய்திருக்கிறார். இதேபோல முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக எம்எல்ஏ அர‌விந்த் பெல்லத்தை அமைச்சர் ஆவதை தடுத்தார்.

கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலகியபோது, டெல்லியைச் சேர்ந்த சில தலைவர்கள் என்னை அணுகினர். ரூ.2,500 கோடி கொடுத்தால் எனக்கு முதல்வர் பதவி வாங்கித் தருவதாக கூறினார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறும் போது, ‘‘முதல்வர் பதவிக்காக பசனகவுடாவிடம் ரூ.2,500 கோடி பேரம் பேசிய நபர் யார் என்பதை தெரிவிக்க வேண்டும். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார்.

கர்நாடக மாநிலம் விஜயாபுராவை சேர்ந்த பசனகவுடா பாட்டீல் யத்னால், 2002 முதல் 2004 வரை மத்திய இணை அமைச்சராக இருந்தார். வட கர்நாடகாவை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் பரபரப்பான கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்குவார்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக தொடர்ந்து புகார்களைக் கூறி, அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கியதில் இவருக்கு பெரிய பங்கு உண்டு. பாஜக மேலிடத் தலைவர்களையே விமர்சித்து பேசுவதால் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in