

டெல்லி அருகே ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக வயலில் தரையிறக்கப்பட்டது. இதில் விமானி உட்பட 7 பயணிகளும் உயிர் தப்பினர்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து நேற்று மதியம் டெல்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நோக்கி இந்த விமானம் வந்து கொண்டிருந்தது. விமானத்தில் வீரேந்திர ராய் (61) என்ற இதய நோயாளி, குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனை யில் சேர்ப்பதற்காக அழைத்து வரப்பட்டார். அதே விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக சிலரும் அழைத்துவரப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியை அடையும் முன் விமான இயந்திரத் தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமானத்தை அவசரமாக தரையிறக்க விமான நிலையத்தின் அனுமதியை விமானி கோரினார். என்றாலும் விமான நிலையத்துக்கு 10 கி.மீ. முன்னதாக, விமானத்தை தென்மேற்கு டெல்லியின் நஜாப்கார் பகுதியில் வயலில் தரையிறக்கினார். இதில் விமானம் சேதம் அடைந்தது. விமானி உள்ளிட்ட 7 பயணிகளும் உயிர் தப்பினர். ஒரு சிலர் மட்டும் லேசான காயம் அடைந்தனர்.
இந்த விமானம் சண்டீகரைச் சேந்த பீச் கிங் ஏர் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது. சி-90ஏ ரகத்தை சேர்ந்த இந்த விமானம் 4,581 கிலோ எடை கொண்டது. 1989-ல் கட்டப்பட்ட இந்த விமானம் 27 ஆண்டுகள் பழமையானது. ஒரு விமானி உட்பட 7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது.
இதனிடையே விபத்து குறித்து விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.