மக்களவை சபாநாயகருக்கு ரூ.50 லட்சத்தில் ஜாகுவார் கார்

மக்களவை சபாநாயகருக்கு ரூ.50 லட்சத்தில் ஜாகுவார் கார்
Updated on
1 min read

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜாகுவார் காரில் செல்வது இப்போது விவாத பொருளாகி உள்ளது.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டொயோட்டா கார் பயன்படுத்தி வந்தார். அந்த கார் 5 ஆண்டு பழையது என்று கூறப்படுகிறது. இப்போது அவருக் காக ஜாகுவார் கார் வாங்கப் பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.50 லட்சம். பாதுகாப்பு காரணங் களுக்காக சபாநாயகருக்கு ஜாகுவார் கார் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இது விவாத பொருளாகி உள்ளது.

இதுகுறித்து மக்களவை செயலாளர் டி.கே.பால் கூறும்போது, ‘‘பாதுகாப்பு அம்சங்களை வைத்து பார்க்கும் போது ஜாகுவார் கார்தான் இருப்பதிலேயே மிகவும் விலை குறைந்தது. வேறு கார் என்று பார்த்தால் பிஎம்டபிள்யூ. கார்தான்’’ என்று தெரிவித்தார்.

சுமித்ரா மகாஜனுக்கு கடந்த திங்கட்கிழமை ஜாகுவார் கார் அவரது வீட்டிலேயே வழங்கப்பட்டுள்ளது. சபாநாயகர் பயன்படுத்தும் காருக்கு எவ்வளவு பணம் செலவிட வேண்டும் என்பதற்கான உச்சவரம்பு இல்லை. எனினும், ஜாகுவார் கார் வாங்கியது குறித்து காங்கிரஸ் கட்சி இப்போது கேள்வி எழுப்பி உள்ளது. ‘‘சுமித்ரா மகாஜன் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மனீஷ் திவாரி கூறியிருக்கிறார்.

எனினும், ‘‘சபாநாயகர் என்பவர் மிகவும் மதிப்புக்கு உரியவர். மாநிலங்களவை தலைவர், மக்களவை சபாநாயகர் போன்றவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிகமிக முக்கியம். சபாநாயகர் பதவி என்பது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு நிகரானது. மேலும், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், துணை பிரதமர் பதவிக்கு அடுத்து வருவது சபாநாயகர் பதவிதான். எனவே, மரபுப்படி அவருக்கு ஜாகுவார் கார் வழங்கப்பட்டது’’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in