

குஜராத்தில் பாஜக பெண் எம்.பி. கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது.
ஜாம்நகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பூனம்பென் ஹேமத்பாய் மாடம் (41). இந்த தொகுதிக்குட்பட்ட ஜலராம் நகர் பகுதியில் உள்ள சில சட்டவிரோத குடிசைப் பகுதிகளை இடிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற் றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், நகராட்சி அதி காரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அந்தத் தொகுதி எம்.பி.யான மாடம், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றார். அப்பகுதியில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயின் மேல் மூடப்பட்டிருந்த கான்கிரீட் மூடியின் மீது நின்றிருந்தார். அந்த மூடி திடீரென உடைந்ததில், 8 அடி ஆழம் கொண்ட கால்வாயில் மாடம் விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து மருத்துவர் மகேஸ்வரி கூறும்போது, “மாடமின் தலையில் 4 அங்குல அளவுக்கு வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர தோள்பட்டை மற்றும் பாதத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை” என்றார்.