Published : 07 May 2022 07:17 AM
Last Updated : 07 May 2022 07:17 AM
உதம்பூர்: எப்போதும் போருக்கு தயார் நிலையில் இருக்கிறோம் என்று இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவு கமாண்டர் உபேந்திர துவிவேதி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் 7 கட்டளை பிரிவுகள் உள்ளன. இதில் வடக்கு கட்டளை பிரிவின் கீழ் லடாக், ஜம்மு-காஷ்மீர் பகுதிகள் உள்ளன. இந்த கட்டளை பிரிவின் சார்பில் காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் 2 நாள் தொழில்நுட்ப மாநாடு நேற்று தொடங்கியது. இதில் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் வடக்கு கட்டளை பிரிவின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திர துவிவேதி பங்கேற்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வடக்கு பிராந்தியத்தில் இருமுனை (சீனா, பாகிஸ்தான்) அச்சுறுத்தல் நீடிக்கிறது. எனவே எப்போதும் போருக்கு தயார் நிலையில் இருக்கிறோம். கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு லடாக் எல்லைப் பகுதிகளில் இருந்து சீன வீரர்கள் பின்வாங்க மறுத்தனர். அப்போது இந்திய ராணுவ தரப்பில் "ஆபரேசன் பனி சிறுத்தை" நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி மிக குறுகிய காலத்தில் பான்காங் ஏரியின் முக்கிய மலைமுகடுகள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. எல்லையில் ஆயிரக்கணக்கான வீரர்களும் ஆயுதங்களும் குவிக்கப்பட்டன. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு எல்லையில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியா, சீனா இடையே பதற்றத்தை தணிக்க இரு நாடுகளின் ராணுவத்தில் உள்ளூர் நிலையில் "ஹாட்லைன்" தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ராணுவ வீரர்கள் பரஸ்பரம் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தவிர்க்கப்படும். கருத்து வேறுபாடுகள் எழுந்தால் பட்டாலியன், பிரிகேடியர் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் இப்போதைக்கு நிலைமை சீராக உள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறக்கூடாது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தீவிரவாத முகாம்கள் செயல்படுகின்றன. அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ சுமார் 200 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். மேலும் ஆளில்லா விமானங்கள் மூலம் காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதங்களை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய ராணுவத்தின் அதிதீவிர கண்காணிப்பால் எல்லை தாண்டும் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் விட்டுச் சென்ற ஆயுதங்களை காஷ்மீர் தீவிரவாதிகள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டர்களின்போது தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு சீன தயாரிப்பு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT