ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்தில் முரண்பட்ட தகவல்களை சசிகலா தரப்பு தெரிவிப்பது ஏன்? - கர்நாடக அரசு வழக்கறிஞர் கேள்வி

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்தில் முரண்பட்ட தகவல்களை சசிகலா தரப்பு தெரிவிப்பது ஏன்? - கர்நாடக அரசு வழக்கறிஞர் கேள்வி

Published on

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா தரப்பு முன்னுக்கு பின் முரணான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாதிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று 2-வது நாளாக கர்நாடக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா ஆஜராகி தனது இறுதி தொகுப்பு வாதத்தை முன் வைத்தார். அப்போது அவர் ‘‘சசிகலா, சுதாகரன் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருந்த ஆஞ்ச நேயா பிரிண்ட்டர்ஸ் நிறுவனத் துக்கு சொந்தமான கட்டிடங்களின் மதிப்பை சசிகலா தரப்பு நீதிமன்ற த்தில் தெரிவிக்கவில்லை.இது பற்றி கர்நாடக உயர்நீதிமன்றத் திலும், உச்சநீதிமன்றத்திலும் முன்னுக்கு பின் முரணான தகவல்களே அளிக்கப்பட்டுள்ளது. அதன் உள்நோக்கம் என்ன?’’ என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து நீதிபதி பினாகி சந்திரகோஷ் உத்தரவிட்டதன் பேரில் ஆஞ்சநேயா பிரிண்ட்டர்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறித்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு நகலை சசிகலா தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் தாக்கல் செய்தார்.

கடனாக கருத முடியாது

தொடர்ந்து ஆச்சார்யா வாதிடு கையில், ''சசிகலா உள்ளிட்ட மூவ‌ ரும் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சட்டத்துக்கு உட்பட்ட தாக காண்பிக்க பல தனியார் நிறுவனங்களை தொடங்கினர். இந்த நிறுவனங்கள் செயல்படாத போதும், அதில் இருந்து வருமான‌ம் வந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்கான வரியையும் செலுத்தி வருமான வரித்துறை தீர்ப்பாயத் தின் தீர்ப்பையும் சுட்டிக்காட்டு கின்ற‌னர்.

இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ், ஜெ. ஃபார்ம் ஹவுஸ் ஆகிய நிறுவனங்களின் பேரில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியதாக சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.

மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட மூவரும் அந்நிறுவனங்களின் பங்குதாரர்களாக இருப்பதால், அவற்றை கடனாக கருத முடியாது. எனவே நீதிபதி குன்ஹா சசிகலா தரப்பின் வாதத்தை முழுமையாக நிராகரித்தார். இதையே உச்சநீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும்''என்றார்.

இதைத் தொடர்ந்து வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது. 3-வது நாளாக இன்றும் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது இறுதி தொகுப்பு வாதத்தை தொடர்வார். எனவே தீர்ப்பு தேதி வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in