Published : 06 May 2022 06:12 PM
Last Updated : 06 May 2022 06:12 PM

‘‘இந்தியாவில் தினந்தோறும் ஸ்டார்டப் நிறுவனங்கள்; ஒவ்வொரு வாரமும் புதிய கண்டுபிடிப்புகள்’’- பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: நாட்டில் தற்போது தினந்தோறும் ஏராளமான ஸ்டார்டப் நிறுவனங்கள் பதிவு செய்யப்படுவதுடன், ஒவ்வொரு வாரமும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.

ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ‘ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் கூறியதாவது:

இலக்குகளை அடைவதற்கான வளர்ச்சி குறித்த இந்தியாவின் உறுதிப்பாடுகளை உலகமே உற்று நோக்குகிறது. சர்வதேச அமைதி, சர்வதேச வளம், சர்வதேச சவால்களுக்கான தீர்வு அல்லது சர்வதேச விநியோக சங்கிலியை வலுப்படுத்துவது என, எதுவாக இருந்தாலும், ஒட்டுமொத்த உலகமும் பெரும் நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது. அமிர்தகாலம’ தொடர்பான இந்தியாவின் உறுதிப்பாடு குறித்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இப்போதுதான் நாடு திரும்பியிருக்கிறேன்.

எந்தத்துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், பிரச்சனைக்குரிய துறையாக இருந்தாலும், மக்கள் கருத்தில் எத்தகைய வித்தியாசம் இருந்தாலும், புதிய இந்தியாவின் எழுச்சியால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். நாடு தற்போது, வாய்ப்புகள் மற்றும் சாத்தியம் என்பதைத் தாண்டி, உலக நலன் என்ற மாபெரும் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருப்பதாக அனைவரும் கருதுகின்றனர்.

தூய்மையான எண்ணம், தூய்மையான நோக்கம், மற்றும் சாதகமான கொள்கைகள் என்ற தமது முந்தைய உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன். நாடு தற்போது, திறமை, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை இயன்றவரை ஊக்குவிக்கிறது. நாட்டில் தற்போது தினந்தோறும் ஏராளமான ஸ்டார்டப் நிறுவனங்கள் பதிவு செய்யப்படுவதுடன், ஒவ்வொரு வாரமும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது.

அரசு மின்னணு சந்தை (GeM) இணையதளம் செயல்பாட்டிற்கு வந்ததில் இருந்து, அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளும், அனைவரது முன்னிலையிலும் ஒரே தளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களும், சிறுவணிகர்கள் மற்றும் சுயஉதவிக் குழுவினரும் தங்களது உற்பத்தி பொருட்களை அரசுக்கு நேரடியாக விற்பனை செய்யலாம். தற்போது 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் GeM இணையதளத்தில் இணைந்துள்ளது.

வெளிப்படையான ‘முக அறிமுகமற்ற’ வரி மதிப்பீடு, ஒரே நாடு- ஒரே வரி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. எதிர்காலத்திற்கான நமது பாதையும், இலக்கும் தெளிவாக உள்ளன. “தற்சார்பு இந்தியா, நாம் பின்பற்ற வேண்டிய பாதை மட்டுமின்றி நமது உறுதிப்பாடு ஆகும். பல ஆண்டுகளாகவே இதற்குத் தேவையான அனைத்து சூழலையும் உருவாக்க நாம் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 75 அமிர்த ஏரிகளை உருவாக்க எவ்வாறு ஒத்துழைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x