வியத்தகு ரிசல்ட் தந்த புனே ‘பஸ் டே’ - கொண்டாட்டங்களும் சலுகைகளும்!

வியத்தகு ரிசல்ட் தந்த புனே ‘பஸ் டே’ - கொண்டாட்டங்களும் சலுகைகளும்!
Updated on
2 min read

சென்னையில் பேருந்து தினம் எப்படி கொண்டாடப்படும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்ததுதான். ஒரு பேருந்தின் வழித்தடத்தில் செல்லும் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து அந்த பேருந்தின் மேல் ஏறியும், படியில் தொங்கிக் கொண்டும் பேருந்து தினம் கொண்டாடிய காட்சிகள் எல்லாம் சென்னையின் சாலைகளில் அரங்கேறியுள்ளன. இந்தப் பேருந்து தின கொண்டாட்டத்தில் பல தகராறுகளும் நடந்துள்ளன.

ஆனால், இதற்கு எல்லாம் மாறாக இந்தியாவில் மாநில அரசின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் சார்பில் பேருந்து தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தில் பயணிகள் உட்பட அனைவருக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. புனே நகரில் கொண்டாடப்பட்ட இந்தப் பேருந்து தினம் குறித்தும், அதன் பின்புலத்தையும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.

புனே: மகாராஷ்டிராவில் உள்ள புனே மாநகரில் போக்குவரத்து சேவையை புனே மகாநகர் போக்குவரத்து நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த புனே போக்குவரத்து நிறுவனத்தின் கீழ் 2,200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள போக்குவரத்து நிறுவனங்களில் 5-ஆவது பெரிய போக்குவரத்து நிறுவனம் புனே போக்குவரத்து நிறுவனம் ஆகும்.

சிஎன்ஜி: மின்சார பேருந்துகள் அதிக அளவில் புனேவில்தான் இயக்கப்படுகின்றன. சிஎன்ஜியில் இயங்கும் பேருந்துகளும் புனேவில் இயக்கப்படுகின்றன. 1600 சிஎன்ஜி பேருந்துகள், 160 மின்சார வாகனங்கள் புனேவில் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு பேருந்துகளுக்கு என்று தனி பனிமனையும் செயல்பட்டுவருகிறது. 2023-ம் ஆண்டுக்குள் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை 650 ஆக உயர்த்த புனே போக்குவரத்து நிறுவனம் முடிவு செய்துள்ளது.

4 வகை: புனேவில் 4 வகையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புனே ரயில் நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல, நகரின் முக்கிய நகரங்களுக்குச் செல்ல, விமான நிலையத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்குச் செல்ல, பெண்களுக்கு தனி என்று மொத்தம் 4 வகையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பெண்களுக்கான பேருந்தில் சிசிடிவி வசதி உள்ள பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

நிறுவன தினம்: இந்த நிறுவனத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 18 முதல் 23-ம் தேதி நிறுவன வாரம் கடைபிடிக்கப்பட்டது. இந்த வாரத்தை முன்னிட்டு ஏப்ரல் 18-ம் தேதி பஸ் டே கொண்டாடப்படும் என்று இந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பேருந்து தினத்தில் பேருந்து பயணம் செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. பொதுப் போக்குவரத்து பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த தினம் கொண்டாடப்பட்டது.

11 லட்சம்: இந்தப் பேருந்து தினத்தன்று குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.10 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. பெண்களுக்கான ஒரு நாள் பயண அட்டையின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக பஸ் டே தினத்தில் மட்டும் 11 லட்சம் பேர் புனே நகர அரசு பேருந்துகளின் பயணம் செய்துள்ளனர். முன் எப்போதும் இல்லாத அளவு அதிகம் பேர் பேருந்துகளின் பயணம் செய்துள்ளனர்.

இனி வரும் காலங்களில் இதுபோல் பஸ் டே கொண்டாடப்படும் என்றும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் புனே போக்குவரத்து நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களும் இந்த நடைமுறை பின்பற்றினால் பேருந்துகளை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று நகர்புற வளர்ச்சி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in