

டெல்லி: நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய மின்சார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக மின் உற்பத்தி செய்ய முடியாமல் பல மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்க 1100 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மின்சார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," அனைத்து மாநிலங்களும் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே நிலக்கரி இறக்குமதி செய்ய ஆர்டர் அளித்துள்ளன. பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்கள் டெண்டரை இறுதி செய்யும் நிலையில் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.