Published : 06 May 2022 06:49 AM
Last Updated : 06 May 2022 06:49 AM
பாட்னா: இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றும் பிஹார் முழுவதும் 3 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு பாத யாத்திரை செல்ல இருப்பதாகவும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேற்று அறிவித்தார்.
பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை பிரசாந்த் கிஷோர் சந்தித்து அடுத்து வரும் குஜராத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக சில ஆலோசனைகளை வழங்கியதாக தகவல் வெளியானது. மேலும் அவர் காங்கிரஸில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
அந்த செய்தியை மறுத்த பிரசாந்த் கிஷோர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகர் ராவின் டிஆர்எஸ் கட்சிக்கு வியூகம் அமைத்துக் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், அவர் இரு தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் எனது பக்கத்தைத் திருப்பும்போது, உண்மையான மாஸ்டர்களிடம் (மக்கள்) செல்வதற்கு இதுதான் சரியான நேரம் என கருதுகிறேன். இது பிஹாரில் இருந்து தொடங்கும்” என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிஹார் மாநிலத்தை கடந்த 30 ஆண்டுகளாக லாலு பிரசாத்தும், நிதிஷ் குமாரும் ஆட்சி செய்துள்ளனர். ஆனாலும் இம்மாநிலம் இன்னமும் ஏழ்மையிலேயே உள்ளது. பல்வேறு வளர்ச்சி அளவுகோலின்படி பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. வரும்காலங்களில் வளரும் மாநிலங்கள் பட்டியலில் பிஹார் இடம்பெற வேண்டுமானால் புதிய சிந்தனை மற்றும் புதிய முயற்சி தேவைப்படுகிறது.
எனவே, பொதுமக்களுக்கான நல்லாட்சி (ஜன் சுராஜ்) என்ற முழக்கத்துடன் அடுத்த 3, 4 ஆண்டுகளுக்கு மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். மகாத்மா காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2-ம் தேதி மேற்கு சம்பரனில் உள்ள காந்தி ஆசிரமத்திலிருந்து பாத யாத்திரையை தொடங்க உள்ளேன். 3 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளேன். நல்லாட்சிக்கான கருத்துகளை பகிர்ந்துகொள்ள விரும்பும் திறமையான சிலரை அடுத்த 3, 4 மாதங்களில் சந்திக்க உள்ளேன். அவர்களையும் இந்த இயக்கத்தில் இணைத்துக் கொள்வேண்.
பிஹாரில் இப்போதைக்கு தேர்தல் எதுவும் நடைபெறப் போவதில்லை. எனவே, இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை. வரும் காலத்தில் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என முடிவு செய்தால், அது பிரசாந்த் கிஷோரின் பெயரில் இருக்காது. அது மக்களின் கட்சியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT