

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் அளித்ததாக நினைத்து, அப்பாவி விவசாயி ஒருவரின் வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தின் பில்சண்டா பிளாக்கில் உள்ள கஜுரியா நிர்பிராம் பகுதியைச் சேர்ந்தவர் மன்மோகன் சிங். தனக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருகிறார்.
இவர் பாங்க் ஆப் பரோடா வங்கியின் நந்த்காவ்ன் கிளையில் கணக்கு வைத்துள்ளார். அத்துடன், விவசாய கடனாக வங்கியில் ரூ.4 லட்சம் பெற்றுள்ளார். அதற்கான தனி கணக்கும் மன்மோகன் சிங்குக்கு உள்ளது. கடன் தொகையில் இதுவரை ரூ.32 ஆயிரத்தை திருப்பிச் செலுத்தி உள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் இவரது 2 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. அதை அறிந்து மன்மோகன் சிங் அதிர்ச்சி அடைந்தார். வங்கி மேலாளரிடம் இதுகுறித்து விசாரித்தார். அதற்கு, “தொழிலதிபர் விஜய் மல்லை யாவுக்கு நீங்கள் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறி, உங்கள் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க, மும்பையில் உள்ள பாங்க் ஆப் பரோடா தலைமை அலுவலகத்தில் இருந்து கூறினர்” என்று மேலாளர் தெரிவித்தார்.
அதைத் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த மன்மோகன் சிங், “மல்லையாவை பற்றி பத்திரிகை செய்திகளில் பார்த்துதான் எனக்கு தெரியும். எனக்கும் மல்லையாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மும்பையை நான் பார்த்ததுகூட இல்லை. என் வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பட அனுமதியுங்கள்” என்று மன்றாடினார்.
இதையடுத்து, நிலைமையை விளக்கி தலைமை அலுவலகத் துக்கு வங்கி மேலாளர் கடிதம் எழுதினார். ஒரு வழியாக கடந்த வெள்ளிக்கிழமை அவரது வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்படுத்த மும்பை அலுவலகத் தில் இருந்து நந்த்காவ்ன் வங்கிக் கிளைக்கு பதில் வந்தது.
இதுகுறித்து தகவல் அறிய, மும்பை பாங்க் ஆப் பரோடா அதிகாரிகளை தொடர்புகொள்ள பல முறை முயற்சித்தும் முடியவில்லை. எங்கோ ஒரு கிராமத்தில் உள்ள சாதாரண விவசாயி, மல்லையாவுக்கு வங்கி உத்தரவாதம் அளித்ததாக கருதி வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. இதனால் கடந்த செப்டம்பரில் இருந்து அந்த விவசாயி வங்கிக்கு பல முறை அலைந்துள்ளார். இந்த தவறு எப்படி நிகழ்ந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுமா என்று தெரியவில்லை.