Published : 05 May 2022 09:26 PM
Last Updated : 05 May 2022 09:26 PM

உ.பி. மதிய உணவுத் திட்ட முறைகேட்டை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் பவன் ஜெய்ஸ்வால் புற்றுநோயால் உயிரிழப்பு

புது டெல்லி: கடந்த 2019-இல் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த மதிய உணவுத் திட்ட முறைகேட்டை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் பவன் ஜெய்ஸ்வால் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூர் பகுதியில் அமைந்துள்ள ஜமால்பூர் வட்டத்தில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளி ஒன்றில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் சப்பாத்தி ரொட்டிக்கு உப்பை வைத்துச் சாப்பிடுவதை வீடியோவாக படம்பிடித்து, முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் பவன் ஜெய்ஸ்வால். அதன் எதிரொலியாக, அந்தப் பள்ளியின் பொறுப்பு ஆசிரியர் மற்றும் கிராம பஞ்சாயத்து மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் பத்திரிகையாளர் பவன் ஜெய்ஸ்வால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தனது தரப்பில் விளக்கம் கொடுத்திருந்தார் பவன்.

"பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தில் நடைபெற்று வந்த முறைகேடு குறித்து பலமுறை நான் தகவல் கொடுத்துள்ளேன். சம்பவத்தன்று அந்தப் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு கல்வித்துறை அதிகாரி ஒருவருக்கு போன் செய்து நான் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு செல்வதாக தெரிவித்தேன். தொடர்ந்து வீடியோவை பதிவு செய்ததும் உள்ளூர் பத்திரிகையாளரிடம் பேசினேன். அவர் மாவட்ட நீதிபதியிடம் தகவலைப் பகிர்ந்தார். அங்கு நேரில் சென்று விசாரணை நடத்திய நீதிபதி, இதில் தொடர்புடையவர்களை இடைநீக்கம் செய்தார். ஆனால், வழக்கு என் மீது பதியப்பட்டுள்ளது" என அப்போது சொல்லியிருந்தார். தொடர்ந்து மாநில அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு பத்திரிகை சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், அவருக்கு வாய்ப் பகுதியில் புற்றுநோய் இருப்பது உறுதியானது. தொடர்ந்து அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது சிகிச்சைக்கு நிதி உதவி வேண்டி அவர் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட சில அரசியல் தலைவர்களிடம் உதவி கோரியிருந்தார். இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x