Published : 05 May 2022 06:16 PM
Last Updated : 05 May 2022 06:16 PM

ஜம்முவுக்கு 43, காஷ்மீருக்கு 47 சட்டப்பேரவை தொகுதிகள்: தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் தனது இறுதி அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

அதில், சட்டப்பேரவைத் தொகுதிகள் எண்ணிக்கை காஷ்மீர் பள்ளத்தாக்கில் 46-ல் இருந்து 47 ஆகவும் ஜம்மு பிராந்தியத்தில் 37-ல் இருந்து 43 ஆகவும் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்டிருக்கும்.

மேலும், ஜம்மு காஷ்மீரின் 5 மக்களவைத் தொகுதிகளும் சம எண்ணிக்கையில் தலா 18 பேரவை தொகுதிகளை கொண்டிருக்கும். ஜம்முவில் 6, காஷ்மீரில் 3 என மொத்தம் 9 தொகுதிகளை பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது இதுவே முதல்முறையாகும். அனைத்து பேரவை தொகுதிகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட எல்லைக்கு உட்பட்டதாக இருக்கும்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பண்டிட் சமூகத்தினருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கும் நியமனம் மூலம் பிரதிநிதித்துவம் வழங்கவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது. அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்வதற்காக இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த எல்லை நிர்ணயக் குழு ஓர் ஆண்டுக்குள் எல்லை நிர்ணய நடவடிக்கைகளை முடிக்க பணிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாட்டில் நிலவி வந்த கரோனா பொதுமுடக்கம் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியாததால், கால அவகாசம் நீட்டிக்கும்படி குழு உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கிணங்க அதன் பணிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x