Published : 05 May 2022 01:42 PM
Last Updated : 05 May 2022 01:42 PM

‘‘முதலில் இயக்கம் பிறகு கட்சி’’- பிஹாரில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரை: பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

பாட்னா: ஜன் ஸ்வராஜ் (நல்லாட்சி) என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கப் போவதாகவும், பிஹாரில் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செய்து பொதுமக்களை சந்திக்க உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டே காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையக்கூடும் என மீண்டும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தினார். ஆனால் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ர சமதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற திடீர் என ஒப்பந்தம் செய்தது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில் புயலை கிளப்பியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார்.

காங்கிரஸில் சேரும் அவரது திட்டம் தோல்வியடைந்தத நிலையில் பிஹாரை மையமாக கொண்டு புதிய கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக மறைமுகமாக கருத்து தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ட்வீட் தெரிவித்து இருந்தார்.இதற்கான அறிவிப்பு இன்று (மே 5) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளில் லாலு பிரசாத் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆட்சியின்கீழ் பிஹார் மிகவும் பின்தங்கிய ஏழை மாநிலமாக உருவாகியுள்ளது. சமூக நீதி மற்றும் வளர்ச்சியின் அடையாளமாக இரு கட்சிகளும் தங்களை கூறிவந்தாலும், யதார்த்தம் இதுதான். எனவே, பிஹார் மக்கள் புதிய எண்ணத்தையும், புதிய முயற்சியையும் செய்ய வேண்டும். இல்லையெனில் மாநிலம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது. எனவே பிஹார் மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிய உள்ளேன்.

நான் கட்சி தொடர்பான அறிவிப்பை ஏதும் வெளியிடப் போவதில்லை. ஜன் ஸ்வராஜ் (நல்லாட்சி) இது தான் எங்கள் இலக்கு. இதனையே முன்னெடுக்கப்போகிறோம். பிஹாரில் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதத்தில் மேலும், 17 ஆயிரம் மக்களை சந்தித்து மக்கள் நல்லாட்சி திட்டம் குறித்து பேசவுள்ளேன். மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி 3,000 கிமீ பாதயாத்திரை பயணத்தை தொடங்கவுள்ளேன்.

பிஹாரில் தற்போதைக்கு தேர்தல் ஏதும் இல்லை. தேர்தல் தான் எனது நோக்கம் என்றால் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆறு மாதம் முன்னர் கட்சி தொடங்கி போட்டியிட்டிருக்கலாம். தேர்தல் என் நோக்கம் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x