Published : 05 May 2022 07:23 AM
Last Updated : 05 May 2022 07:23 AM
புதுடெல்லி: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு நேற்று தொடங்கியது.
டெல்லி தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டுமானத் தொழிலாளர்கள் சிலருக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இலவச பஸ் பாஸ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பயன் அடைவர்.
டெல்லியில் மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த 10 லட்சம் தொழிலாளர்கள் நலனுக்காக இதுவரை ரூ.600 கோடியை டெல்லி அரசு வழங்கியுள்ளது. நாட்டின் எந்த மாநிலத்திலும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இவ்வளவு தொகை வழங்கப்பட்டதில்லை.
தற்போது கட்டுமானத் தொழிலாளர்களுக்காக இந்த இலவச பஸ் பாஸ் திட்டத்தை தொடங்கியுள்ளோம். பஸ் கட்டணத்துக்கு ஆகும் செலவை தொழிலாளர்கள் மாதம்தோறும் சேமித்து தங்களுடைய குடும்ப நலனுக்குப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கட்டுமானத் தொழிலாளர்கள் பிரிவில் கட்டிட மேஸ்திரி, பெயின்டர், வெல்டர், தச்சு வேலை செய்பவர்கள், கிரேன் ஆப்பரேட்டர்கள் ஆகியோர் அடங்குவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT