

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ்தாக்கரே வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் அவுரங்காபாத்தில் கடந்த 2-ம் தேதி நவநிர்மாண் சேனாவின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு ராஜ் தாக்கரே பேசும்போது, “மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் அகற்றப்படவில்லை என்றால், இந்துக்கள் மசூதிகளின் முன் நின்று இரு மடங்கு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளில் அனுமன் பாடல்களை ஒலிக்க செய்வார்கள். மேலும் ஒலி பெருக்கிகளை அகற்றாவிட்டால் 4-ம் தேதி (நேற்று) முதல் நடைபெறும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பல்ல” என பேசியிருந்தார்.
இதனிடையே நேற்று ராஜ் தாக்கரே கூறும்போது, “ஒலிபெருக்கிகளை அகற்றும் போராட்டத்தை நிறுத்தமாட்டோம். ஒலிபெருக்கிகளால் மாணவர்களும், வயதானவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மக்களை விட உங்களுக்கு மதம்தான் பெரிதா?” என்றார். இந்நிலையில் மகாராஷ்டிராவின் பர்பானா, உஸ்மனாபாத், ஹிங்கோலி, ஜல்னா, நான்டெட், நந்தூர்பார், ஷிரடி, ஸ்ரீராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மசூதிகளில் இருந்த ஒலிபெருக்கிகள் நேற்று பயன்படுத்தப்படவில்லை. சில இடங்களில் உள்ள மசூதிகளில் குறைந்த அளவு சத்தத்தில் ஒலிபெருக்கிகள் செயல்பட்டன.