Published : 05 May 2022 08:20 AM
Last Updated : 05 May 2022 08:20 AM

இறந்த தந்தையின் ஆசையை நிறைவேற்ற முஸ்லிம்கள் தொழுகை நடத்த நிலத்தை தானம் அளித்த இந்து சகோதரிகள்

ருத்ராபூர்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபூரில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு தங்களின் 20,424 சதுர அடி நிலத்தை, இந்து சகோதரிகள் தானம் அளித்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபூர் அருகே பெயில்ஜுடி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தேலா ஆற்று பாலம் அருகே மசூதியை ஒட்டி, தொழுகை நடத்தும் மைதானம் (ஈத்கா) 4 ஏக்கரில் உள்ளது. இங்கு ரம்ஜான் உட்பட ஈத் பண்டிகை காலத்தில் சுமார் 20,000 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவர்.

இந்த இடத்துக்கு அருகே, லாலா பிரிஜ்னந்தன் பிரசாத் ரஸ்தோகி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது.

இவர் அனைத்து மதங்களையும் மதிக்கக்கூடியவர். இவர் தனது நிலத்தின் ஒரு பகுதியை ஈத்காவுக்கு தானம் அளித்து, இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையேயான உறவை வலுப்படுத்த விரும்பினார். ஆனால் தனது ஆசை நிறைவேறுவதற்கு முன்பாகவே, கடந்த 2003ம் ஆண்டில் லாலா பிரிஜ்னந்தன் பிரசாத் இறந்துவிட்டார்.

மகள்களின் பங்கு..

அவரது நிலத்தை அவரது மகன் மற்றும் மகள்கள் பிரித்துக் கொண்டனர். ஈத்காவுக்கு தானம் அளிக்க பிரிஜ்னந்தன் விரும்பிய நிலம், அவரது மகள்கள் சரோஜ் மற்றும் அனிதா ஆகியோரின் பங்காக வந்தது.

தற்போது, சரோஜ் உத்தரபிரதேசத்தின் மீரட் நகரிலும், அனிதா டெல்லியிலும் தங்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்கள் தங்களின் நிலத்தை, தந்தை விருப்பப்படியே ஈத்காவுக்கு தானம் அளிக்க முன்வந்தனர்.

காசிபூர் ஈத்கா கமிட்டியை தொடர்பு கொண்டு, இவர்கள் தங்கள் நிலத்தை சில நாட்களுக்கு முன் தானம் அளித்தனர். தந்தை இறந்து 19 ஆண்டுகளுக்குப்பின் அவரது ஆசையை, இரு மகள்களும் நிறைவேற்றினர்.

தந்தை அன்பளிப்பு

இதுகுறித்து சரோஜ் கூறுகையில், “எங்கள் தந்தை விருப்பப்படி ஈத்காவுக்கு நிலத்தை தானம் வழங்கினோம். அவர் ஒவ்வொரு ஆண்டும் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்ய, ஈத்கா கமிட்டிக்கு நன்கொடை அளித்து வந்தார். அவர் அனைத்து மதங்களையும் மதிக்க கூடியவர்” என்றார்.

நாட்டின் பல இடங்களில் மத மோதல்கள் நடந்துள்ள நேரத்தில், இந்த இந்து சகோதரிகள், ஈத்காவுக்கு தங்கள் நிலத்தை தானம் வழங்கி மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x