Last Updated : 28 May, 2016 05:17 PM

 

Published : 28 May 2016 05:17 PM
Last Updated : 28 May 2016 05:17 PM

மாநிலங்களவைக்கு 8 காங். வேட்பாளர்கள் அறிவிப்பு: மகாராஷ்டிராவில் இருந்து எம்.பி. ஆகிறார் ப.சிதம்பரம்

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் 8 பெயர்களை வெளியிட்டுள்ளது. இதில், முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் மகராட்டிராவில் இருந்து எம்.பி.யாக உள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். காங்கிரஸின் 70 வயது மூத்த தலைவரான இவர், தமிழகத்தை சேர்ந்தவர். 2014-ல் நடந்த மக்களவை தேர்தலில் சிதம்பரம் போட்டியிட மறுத்து விட்டார். இதனால், இவருக்கு பதிலாக மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்திருந்தது. இதில், கார்த்தி தோல்வி அடைந்தார். தற்போது எம்பி பதவி இன்றி இருக்கும் சிதம்பரத்திற்கு மாநிலங்களவை சார்பில் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இவரது பெயர் மகராட்டிரா மாநிலம் சார்பில் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு இன்று மாலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. மொத்தம் எட்டு வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர்களான ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஆஸ்கர் பெர்ணாண்டஸ் ஆகியோர் கர்நாடகாவில் இருந்தும் கபில்சிபல் உபியிலும், அம்பிகா சோனி பஞ்சாபில் இருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் சத்திஸ்கரில் இருந்து சாயா வர்மா, மபியில் இருந்து விவேக் தன்கா மற்றும் உத்தராகண்டில் இருந்து பிரதீப் தம்தா ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

உத்தரகாண்ட்டின் பிரபல வழக்கறிஞரான தம்தா அம் மாநில முதல் அமைச்சர் ஹரீஷ் ராவத்திற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இந்த பட்டியல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எடுக்கப்பட்ட முடிவின்படி வெளியிடப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸுக்கான ஒரே ஒரு வேட்பாளர் பெயர் மட்டும் விடுபட்டுள்ளது. கர்நாடகா சார்பிலான இதை அதன் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் உட்பட அனைவரும் சேர்ந்து முடிவு செய்வார்கள் எனக் கருதப்படுகிறது.

சிதம்பரம், கபில்சிபல், அம்பிகா சோனி, ஆஸ்கர் பெர்ணாண்டஸ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகிய முன்னாள் மத்திய அமைச்சர்கள் நுழைவால் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் கிராமநலத்துறையின் மத்திய அமைச்சரான ஜெய்ராம் ரமேஷுக்கு தொடர்ந்து மறுவாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் பிரதமர் நரேந்தர மோடியின் விவசாய கொள்கைகளை எதிர்த்து பேசுவதற்காக அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சோனியாவின் நெருக்கமான தலைவரான அம்பிகா சோனியும் பஞ்சாபில் இருந்து மறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கு விரைவில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரக் குழுவின் தலைவராகவும் அம்பிகா உள்ளார். மறுவாய்ப்பு பெறும் மற்றொருவரான ஆஸ்கர் பெர்ணாண்டஸ், நேஷனல் ஹெரால்டு நிறுவனமான யங் இந்தியன் பிரவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார்.

சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகராட்டிராவின் ஒரே ஒரு வேட்பாளருக்கு கடும் போட்டி காங்கிரஸில் நிலவி வந்தது. இம் மாநிலத்தின் முன்னள் முதல் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே உட்படப் பலரும் முயன்று வந்தனர். ஆனால், இந்த வாய்ப்பு யாரும் எதிர்பாராவிதமாக ப.சிதம்பரத்திற்கு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x