Published : 23 May 2016 05:47 PM
Last Updated : 23 May 2016 05:47 PM

வறட்சிகாலத்தில் வறண்டு போன மக்கள் உரிமைகள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஸ்வராஜ் அபியான் இயக்கம் மக்களுக்கான உரிமைகள், கிடைக்க வேண்டிய நிவாரணம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார யாத்திரையை மேற்கொண்டுள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுகு இட்ட உத்தரவுகளின்படி மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணம் கிடைத்ததா என்று கண்டறிந்த போது அதிர்ச்சியே எஞ்சியது.

வறட்சியால் நீர் வறண்டு போன லத்தூர் மாவட்ட கந்தபூர் கிராமத்தில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்பு சிறிய அளவில் மக்கள் இருந்தனர், காரணம் அப்போது மணி காலை ஏழேகால் என்பதே.

இந்த மக்களின் முன்பாக யோகேந்திர யாதவ்வின் ஸ்வராஜ் அபியான் இயக்கத்தினரும் உடன் இணைந்த சக சமூக ஆர்வல இயக்கங்களும் கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினர்.

அதாவது ஜல் ஹர் பாதயாத்திரையின் 2-ம் நாளாகும் இது. அதாவது சனியன்று தொடங்கிய இந்த மக்கள் உரிமை விழிப்புணர்வு பாதயாத்திரையின் 2-ம் நாளான ஞாயிறாகும்.

அதாவது மே 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் அரசுகளுக்கு சில வழிமுறைகளை உத்தரவிட்டிருந்தது. அது பற்றி மக்கள் அறிந்திருக்கிறார்களா அப்படி இல்லையெனில் அவை என்னென்ன, மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறை ஆகியவற்றை எடுத்துரைக்கும் பாதயாத்திரையாகும் இது.

கந்தபூரில் சமூக ஆர்வலர்களிடம் கேட்ட முதல் கேள்வி, கோடை விடுமுறை நாட்களிலும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறதா என்பதாகும். ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் அங்கு குழுமியிருந்த மக்கள் ‘இல்லை’ என்று கோரஸாக கூறினர்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் படி ரேஷன் அட்டை வைத்திருந்தாலும் வைத்திருக்காவிட்டாலும் கோதுமை கிலோ ரூ.2 என்ற விலைக்கும், அரிசி கிலோ ரூ.3 என்ற விலைக்கும் அளிக்கப்படுகிறதா என்று கேட்டனர். இதற்கும் மக்களிடமிருந்து பதில் இல்லை, குழப்பமே அவர்களிடத்தில் எஞ்சியதை ஆர்வலர்கள் கண்டனர். அதே போல் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான பணி அட்டை எவ்வளவு பேரிடம் உள்ளது என்று கேட்டனர், இதற்கும் குறிப்பிட்ட சில நபர்களே கையை உயர்த்தினர், இத்தருணத்தில் அங்கு குழுமிய மக்கள் திரளும் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மக்கள் வறட்சி நிவாரணப்பணிகள் குறித்த தங்கள் பகுதி எதார்த்தங்களை முன்வைத்தனர். அதில் தெரியவந்தது என்னவெனில், பொதுவினியோக முறைகள் சரிவர நடைபெறவில்லை என்பதும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் மிகப்பெரிய அளவில் இடைவெளி விழுந்திருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து யோகேந்திர யாதவ் கூறும்போது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமே மகாராஷ்டிர மாதிரியில் அமைந்ததுதான் ஆனால் இங்கு அது இவ்வளவு இடைவெளிகளை சந்தித்திருப்பது வெட்கக் கேடானது” என்றார்.

முன்னதாக சனிக்கிழமையன்று கங்காநகர் கிராமத்தில் பெருமளவு குழுமியிருந்த மக்களிடத்தில் யோகேந்திர யாதவ், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணியாற்ற விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டார். மேலும் நாளொன்றுக்கு ரூ.190 ரூபாய் மட்டுமே கூலி வழங்கப்படுவதால் நீங்கள் இந்தத் திட்டத்தில் பணியாற்ற விரும்பவில்லை என்று நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா? என்றும் கேட்டார். இதற்கு கூட்டத்திலிருந்து பெரிய கூச்சலும், எதிர்ப்பும் எழுந்தது. பெண்கள் குறிப்பாக அந்த வேலைத்திட்டத்தை பாராட்டுவதாக தெரிவித்தனர்.

அப்போது யோகேந்திர யாதவ் மீண்டும், “பின் ஏன் உங்களில் வெகுசிலரே பணி அட்டை வைத்திருக்கிறீர்கள், ஆனால் அதிகாரபூர்வ பட்டியலில் 350 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கும் குழப்பான மவுனமே பதிலாக இருந்தது.

இதனையடுத்து தனது குழுவிலிருந்த ஒருவரை நியமித்து அவரிடம் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துகான பணி அட்டையைப் பெற விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய உதவுமாறு அறிவுறுத்தினார் யோகேந்திர யாதவ். பிறகு அட்டை உங்கள் கைக்குக் கிடைத்த பின்னர் 14 நாட்களுக்கு உங்களுக்கு அரசு வேலை கொடுத்தாக வேண்டுமென்பதையும் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

சமூக விழிப்பு நிலை:

மக்களிடம் யோகேந்திர யாதவ் கூறும்போது, “டெல்லியில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் இங்கு நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அரசு செயல்படவில்லை எனில் எங்களிடம் கூறுங்கள், நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்வோம்” என்றார்.

6 மாதங்களுக்கு முன்பாக யோகேந்திர யாதவ் தலைமையில் ஸ்வாரஜ் அபியான் அமைப்பு வறட்சி மாநிலங்களுக்கு பயணம் செய்து தாங்கள் சந்தித்த நிலவரங்களைக் குறிப்பிட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தி கடிதங்களை எழுதினர். ஆனால் ஒரு பயனும் இல்லாததால் உச்ச நீதிமன்றத்தை அணுக அதன் பிறகே மே 13-ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அதாவது தங்களுக்குக் கிடைக்க வேண்டியவை என்ன என்பதையே அறியாமல் இருக்கும் மக்களை மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது என்பதே யோகேந்திர யாதவ்வின் குற்றச்சாட்டாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x