Published : 04 May 2022 07:01 AM
Last Updated : 04 May 2022 07:01 AM
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின நபர் ஒருவர், 3 காதலிகளை, தனது 6 குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
மத்திய பிரதேசம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்ரத் மவுரியா(42). முன்னாள் கிராமத் தலைவர். காதல் மன்னனாக திகழ்ந்த இவர், கடந்த 15 ஆண்டுகளில், 3 பெண்களை காதலித்து, திருமணம் செய்து கொள்ளாமல் தனித்தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு மொத்தம் 6 குழந்தைகள் பிறந்தன.
இவர் சட்டப்படி திருமணம் செய்யாததால், இவரையும், இவரது 3 காதலிகளையும், உள்ளூர் கோயில் விழாக்களில் பங்கேற்க பழங்குடியினர் அனுமதிக்கவில்லை.
மேலும், இவர்களது குழந்தைளுக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 3 காதலிகளையும், முறைப்படி திருமணம் செய்ய சம்ரத் மவுரியா முடிவு செய்தார்.
இதற்காக மண்டபம் பிடித்து திருமணத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, பழங்குடியினர் முறைப்படி 3 காதலிகளையும் தனது 6 குழந்தைகள் முன்னிலையில் மவுரியா திருமணம் செய்தார்.
இந்த திருமணம் குறித்து, அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங்கிடம் கருத்து கேட்டபோது, ‘‘பழங்குடியினர் சமுதாயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வது சட்டப்படியானதா என இப்போதைக்கு என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் பழங்குடியினருக்கென தனியாக பழக்க வழக்கங்கள், சடங்குகள் உள்ளன. அவற்றை நாம் மதிக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT