

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வராக இருந்த எடியூரப்பா நீக்கப்பட்டு, கடந்த ஜூலையில் பசவராஜ் பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்டார். அவரது ஆட்சியில் ஊழல் புகார், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்ததால் பாஜக மூத்த தலைவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பசவராஜ் பொம்மை தலைமையில் தேர்தலை சந்தித்தால் பாஜக தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கட்சி மேலிடத்துக்கு அவர்கள் தகவல் அளித்தனர். அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
பாஜகவின் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் அண்மையில் கூறும்போது, “அரசியலில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல. ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை சமாளித்து வெற்றி பெற வேண்டுமென்றால், புதுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. குஜராத்திலும் டெல்லி மாநகராட்சியிலும் தேர்தலுக்கு முன்பு பாஜக பெரிய மாற்றங்களை மேற்கொண்டது. அதேபோல மாற்றங்கள் கர்நாடகாவிலும் நிகழும்” என்றார்.
இந்நிலையில் நேற்று பெங்களூரு வந்த மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கர்நாடக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் முதல்வர் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மையை மாற்றுவது, அமைச்சரவையை மாற்றி அமைப்பது, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த எம்எல்ஏ பசன கவுடா யத்னால் கூறும்போது, “வரும் 10-ம் தேதிக்குள் கர்நாடக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழும். இதுகுறித்து மேலிடத் தலைவர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். மக்கள் மாற்றத்தை விரும்புவதால் கட்சி மேலிடமும் அதை பரிசீலிக்கும்” என்றார்.