

வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஹமித் அன்சாரிக்கு தனது ராஜினாமா கடிதத்தினை அவர் அனுப்பியுள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தில் “சமீபத்திய நிகழ்வுகள், எனக்கு நியாயமான விசாரணையையோ, நீதியையோ வழங்காது என்பதை அறிவுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாநிலங்களவை நெறிமுறைக் குழுவுக்கு தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் மல்லையா மீது கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்தாத வழக்கும் அவர் மீது நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக அவர் நேரில் ஆஜராவது அவசியம் என்று வங்கிகள் கூட்டமைப்பு அமலாக்கப் பிரிவிடம் வலியுறுத்தியதையடுத்து, அவரது பாஸ்போர்ட்டை முடக்க அமலாக்கப் பிரிவு வெளியுறவு அமைச்சகத்திற்கு முறையீடு வைத்தது.
இதனைப் பரிசீலித்த வெளியுறவு அமைச்சகம் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கி உத்தரவிட்டது. இதனையடுத்து அவரை இந்தியாவுக்கு அனுப்புமாறு டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதகரத்திற்கு மத்திய அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில்தான் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜய் மல்லையா அறிவித்துள்ளார்.