Published : 03 May 2022 04:23 AM
Last Updated : 03 May 2022 04:23 AM

3 நாட்கள் ஐரோப்பிய சுற்றுப்பணம் | ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: காணொலி மூலம் கனடாவில் படேல் சிலையை திறந்து வைத்தார்

மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ளார். ஜெர்மனியின் பெர்லின் நகரில் நேற்று நடைபெற்ற 6-வது இந்திய-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெர்மனி நிதித்துறை அமைச்சர் கிறிஸ்டியன் லின்ட்னர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுடெல்லி: இந்தியர்கள் உலகில் எங்கும் எத்தனை தலைமுறையாக வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் அவர்கள் தாய்நாட்டின் மீதான விசுவாசம் குறையாது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நடப்பு 2022-ம் ஆண்டில் பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இதற்காக ஞாயிற்றுக்கிழமை அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க், பிரான்ஸ்நாடுகளுக்கும் அவர் செல்கிறார்.3 நாடுகளுக்குச் செல்லும் பிரதமர்மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல் என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். மேலும் சர்வதேச தொழில்துறை தலைவர்கள் 50 பேருடன் அவர் கலந்துரையாட உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.

நேற்று காலை கனடா நாட்டின் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற சர்தார் வல்லபபாய் படேல் சிலை திறப்பு விழாவில் ஜெர்மனியில் இருந்தபடி காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "வல்லபபாய் படேலின் இந்த சிலை இந்தியா-கனடா இடையேயான உறவின் அடையாளம். இந்த சிலை இந்தியாவுக்கே உத்வேகமாக விளங்கும் ஒற்றுமை சிலையின் பிரதியாக அமைந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, சர்தார் படேல், சோம்நாத்கோயிலை புதுப்பித்து, ஆயிரக் கணக்கான ஆண்டுகால இந்திய பாரம்பரியத்தை மீட்டெடுத்தது டன், இந்தியாவுக்கு ஒரு புதிய அடித்தளத்தை நிறுவினார்.

வாசுதேவ குடும்பம்

இந்தியர்கள் உலகில் எங்கும் எத்தனை தலைமுறையாக வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் அவர்கள் தேசத்தின் மீதான விசுவாசம் குறையாது. இது ஒரு கலாச்சாரமும் கூட. உலகமே குடும்பம் என்று ‘வாசுதேவ குடும்பம்’ பற்றி பேசும் உயர்மட்ட சிந்தனையை இந்தியா கொண்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு தீங்குவிளைவிக்கும் எண்ணத்தை எப்போதும் கொண்டிருக்கவில்லை" இவ்வாறு பிரதமர் பேசினார்.

பிரதமர் பின்னர் ஜெர்மனி வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று அளவளாவி மகிழ்ந்தார்.

பெர்லினில் வசிக்கும் ஏராளமான ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மற்றும்சிறுவர், சிறுமியர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி மகிழ்ந்தார். அப்போது சிறுமி ஒருவர் தான் வரைந்த பிரதமரின் படத்தை வழங்கினார். அந்த படத்தில் பிரதமர் கையெழுத்திட்டு வழங்கி, சிறுமியை உற்சாகப்படுத்தினார். இந்தப் படத்தை வரைய எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாய் என்றும்கேட்டு சிறுமியைப் பாராட்டினார்.

அதேபோல், சிறுவன் ஒருவன் பிரதமரிடம் ஒரு பாடலை பாடி அசத்தினார். இதனை உற்சாகமாக கேட்டு ரசித்த பிரதமர் சிறுவனை பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பலர் வந்தே மாதரம் என்றும், பாரத் மாதா கீ ஜே என்றும் குரல் எழுப்பினர். சிலர் பிரதமர் மோடியின் பாதம் தொட்டும் வணங்கினர்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x