Published : 02 May 2022 12:13 PM
Last Updated : 02 May 2022 12:13 PM
டெல்லி: எந்தவொரு தனிநபரையும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில மாநிலங்களில் கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று (மே 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கு பின்னணி: தமிழகம், கேரளம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர அனுமதியில்லை என்று மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தன. இது அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது: இந்நிலையில் இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில், "எந்தவொரு தனிநபரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது. அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் அவ்வாறு பொதுமக்களை கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமானது. அதேநேரம், பொது சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள், கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை முடிவுகளை எடுக்க அதிகாரம் உள்ளது.
ஒருவேளை கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தால், அவற்றை நீக்கிடவேண்டும். பொது இடங்களுக்கு வரக்கூடியவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவோ, அறிவிப்பாணையோ வெளியிட்டிருந்தால, அவற்றை திரும்பப் பெற வேண்டும். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதுதொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT