Last Updated : 01 May, 2022 06:52 AM

 

Published : 01 May 2022 06:52 AM
Last Updated : 01 May 2022 06:52 AM

வங்கதேசத்தை சேர்ந்தவர் கைது எதிரொலி: புகழ்பெற்ற தாருல் உலூம் மதரஸாவில் மாணவர்கள் சேர்க்கைக்கு கட்டுப்பாடு

புதுடெல்லி: இந்திய உளவுத் துறை (ஐபி), காவல் துறையால் முகவரி சரிபார்க்கப்பட்டவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று உத்தர பிரதேசத்தின் தாருல் உலூம் மதரஸா அறிவித்துள்ளது.

உ.பி.யின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் நகரில் உலகப் புகழ்பெற்ற தாருல் உலூம்மதரஸா உள்ளது. மிகவும் பழமையான இந்த மதரஸாவில் பயில்பவர்கள், உலக முஸ்லிம்கள் இடையே அதிகம் மதிக்கப் படுகின்றனர்.

இந்த மதரஸாவில் பயிலும் முஸ்லிம் மாணவர் தலா பரூக்என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் (ஏடிஎஸ்) கைது செய்தனர். இவருக்கு கடந்த மார்ச் 14-ல் மத்திய பிரதேசம் போபாலில் 5 பேருடன் கைதான ஜைனுலாபுதீன் என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது.

இதுகுறித்து, ஏடிஎஸ் அதிகாரி கள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த பரூக் மதரஸாவில் பயில்வதற்கு ஆதாரங்களாக அளித்த ஆதார் அட்டை மற்றும் பான்கார்டு எண்கள் போலி என்பதுகண்டுபிடிக்கப்பட்டது. தியோபந்தின் தாருல் உலூம் மதரஸாவில்பயிலும் தலா பருக்கின் கைப்பேசியில் தீவிரவாத அமைப்புகளின் வீடியோ பதிவுகளும் இருந்துள்ளன. இவை, அன்ஸாருல்லா பங்ளா டீம், அல்-கொய்தா மற்றும் பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தலிபான் ஆகிய அமைப்புகளை சார்ந்தவை. இவை அனைத்தையும் தடயவியல் ஆய்வுக்கு ஏடிஎஸ் அனுப்பி உள்ளது.

இதையடுத்து, தாருல் உலூம் மதரஸாவின் மாணவர் சேர்க்கை யில் சில கட்டுப்பாடுகளை நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டுமுதல் மதரஸாவில் பயில விரும்பும் மாணவர்கள், தங்கள் முகவரி தொடர்பான ஆவணங்களை உளவுத் துறை மற்றும் மாநில காவல் துறையினர் சரிபார்த்து அளிக்கும் சான்றிதழை விண்ணப்பத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை தாருல் உலூம் மதரஸாவின் உதவி துணை வேந்தர் மவுலானா அப்துல் காலீக் மதராஸி வெளியிட்டுள்ளார்.

இதுபோல், போலி அடையாள அட்டைகளுடன் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் தியோபந்தில் கைதாவது முதல் முறையல்ல. இதற்கு முன்னர், மார்ச் 21-ல்வங்கதேசத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் சஹாரன்பூரில் கைது செய்யட்டனர். அதற்கு முன்னர் 2 சகோதரர்கள் மற்றும் பிப்ரவரி 2019-ல் 5 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலரும் சிறையில் உள்ளனர். இதற்கு மேற்கு வங்கத்தில் பேசும் பெங்காலி மொழியை வங்கதேசத்திலும் கணிசமானோர் பேசுவது காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x