மின் தட்டுப்பாடுக்கு யார் காரணம்? - பாஜகவை சாடி ப.சிதம்பரம் ட்வீட்

மின் தட்டுப்பாடுக்கு யார் காரணம்? - பாஜகவை சாடி ப.சிதம்பரம் ட்வீட்
Updated on
1 min read

சென்னை: நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாடு குறித்தும் நிலக்கரியை கொண்டு சேர்ப்பதற்காக பயணிகள் ரயிலை நிறுத்தி சரக்கு ரயிலை இயக்குவது குறித்தும் விமர்சித்து முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் சுமார் 70 சதவீதம் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு விரைவாக தீர்ந்து வருகிறது. கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் நிலக்கரி பற்றாக்குறையால் மின்னுற்பத்தி குறைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனல்மின் நிலை யங்களுக்கு நிலக்கரி ரயில்கள் விரைந்து செல்வதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின்தடை தொடர்பாக பல மாநிலங்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மின் தட்டுப்பாட்டுக்கு '60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்' என்று சொன்னாலும் சொல்வார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாஜகவையும், பிரதமரையும் சாடி ட்வீட் செய்துள்ளார்.

பொதுவாகவே பாஜக நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக விமர்சனங்கள் உண்டு. அதனால், பாஜகவின் பாணியிலேயே ப.சிதம்பரம் மின் தட்டுப்பாட்டுப் பிரச்சினையை சூசகமாக விமர்சித்துள்ளார். மின் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு '60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி தான் காரணம்' என்று ஆரம்பித்து தற்போதுள்ள மின்சாரம், ரயில்வே, நிலக்கரி துறைகளின் திறமையின்மையை விமர்சித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியையும் 'சிந்திக்கும் திறனற்றவர்' என்று விமர்சித்துள்ளார். நிலக்கரி எடுத்துச் செல்லும் பொருட்டு பயணிகள் ரயில் சேவையை நிறுத்தியதைச் சுட்டிக் காட்டி அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஏராளமான நிலக்கரி, பெரிய ரயில் நெட்வொர்க், பயன்படுத்தப்படாத அனல் மின் உற்பத்தி ஆலைகளின் திறன், ஆனாலும், கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுகிறது. மோடி அரசை குறை சொல்ல முடியாது. 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்! இது மின்சாரம், ரயில்வே,நிலக்கரி துறைகளின் திறமையின்மை இல்லை. குற்றச்சாட்டு கூறுவது எல்லாம் இந்த துறைகளுக்கு கடந்த காலத்தில் பொறுப்பு வகித்த காங்கிரஸ் அமைச்சர்கள் மீதுதான்! பயணிகள் ரயில்களை ரத்து செய்து நிலக்கரி ரயில்களை இயக்குவதுதான் அரசு கண்டறிந்துள்ள சரியான தீர்வு,மோடி ஹை, மம்கின் ஹை (சிந்தனைத் திறன் அற்றவர்) " என்று தெரிவித்துள்ளார்.

மேலோட்டமாக பார்த்தால் ப.சிதம்பரம் சொந்தக் கட்சியை விமர்சிக்கிறாரா என்று நினைக்கத் தோன்றும் இந்த ட்வீட் நுட்பமான கிண்டல் தொணியில் எழுதப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in